தூது வந்த வீரர்
தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூ லைட் புக் சென்டர், 1504ஏ, எம்ஐஜி, 3ஆம் முதன்மைச் சாலை, மாத்தூர், சென்னை 68, பக். 224, விலை 200ரூ.
தாமஸ் கார்லைல் 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அறிஞர். இவரது எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் உலக இலக்கியத் தரம் வாய்ந்தவை. இவரது சொற்பொழிவுகளை ஆங்கிலேயர்கள் காசு கொடுத்துக் கேட்டனர். அன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தின் மீது மேற்கத்திய நாடுகளின் கிறிஸ்தவர்களும், யூதர்களும் கொண்டிருந்த வெறுப்புணர்வு அளவிட முடியாதது. அந்தளவுக்கு பிரசாரம் முடுக்கி விடப்பட்டிருந்தது. இது சரியா, தவறா என்பது குறித்து, வரலாற்று ரீதியில் ஆய்வு செய்த கிறிஸ்தவரான தாமஸ் கார்லைல், 1840ஆம் ஆண்டு லண்டனில் ஒரு மண்டபத்தில் அதிலும் கிறிஸ்தவர்கள் மட்டுமே கூடியிரந்த கூட்டத்தில் இஸ்லாம் குறித்தும், முகம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்தும் ஆற்றிய உரை, கூட்டத்தினரை திகைக்க வைத்தது. இஸ்லாம் குறித்து இதுவரை நாம் படித்தது, கேட்டது எல்லாம் தவறா என்று எண்ண வைத்தது. அந்தச் சொற்பொழிவு The Hero as Prophet:Mohamed:Islam என்ற தலைப்பில் நூலாக வெளிவர, உலகளாவிய அளவில் அதற்கு நல்ல வரவேற்புக்கிட்டியது. இந்தியாவில் வைதீக ஹிந்துவான மகாத்மா காந்தி முதல், பகுத்தறிவாளர் அண்ணாதுரை வரை அனேக பெருமக்களையும் அந்த நூல் கவர்ந்தது. இஸ்லாம் குறித்த தங்களின் நல்லெண்ண கருத்துக்களுக்கு அந்த நூலும் ஒரு காரணம் என்பதை அவர்களே குறப்பிட்டுள்ளனர். அதேபோல் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ், சில ஆண்டுகளுக்கு முன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இஸ்லாம் அன்ட் தி வெஸ்ட் என்ற தலைப்பில் ஆற்றிய உரையும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த இரு சொற்பொழிவுகளையும் இந்நூலின் பதிப்பாசிரியர் எளிய தமிழில் தகுந்த விளக்கங்களுடன் மொழியாக்கம் செய்து, தரமான பைண்டிங்குடன் நூலை வெளியிட்டுள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 16/10/2013.
—-
மாண்புமிகு மனிதர்கள், கற்பக வித்யா பதிப்பகம், ஜே6, லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 80ரூ.
வானொலியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்ற வானொலி அண்ணா என். சி. ஞானப்பிரகாசம் எழுதிய புத்தகம் மாண்புமிகு மனிதர்கள். காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியார், கவிஞர் கண்ணதாசன், வீராங்கனை கல்பனா சாவ்லா, ஜெய்ஹிந்த் செண்பகராமன், அவ்வை, டி. கே. சண்முகம் உள்பட 12 சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை, குழந்தைகளுக்கு ஏற்றவாறு எளிமையான நடையில் அருமையாக எழுதியுள்ளார். புத்தகம் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி 16/10/2013.