தென்னாட்டுச் செல்வங்கள்
தென்னாட்டுச் செல்வங்கள் (இரண்டு தொகுதிகள்), இறையருள் ஓவியம் சில்பி, விகடன் பிரசுரம், ரூ 650. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-3.html
இறை அருள் பெற்ற ஓவிய மேதை சில்பி ஆனந்தவிகடன் வார இதழில் தென்னாட்டுச் செல்வங்கள் என்னும் தலைப்பில் எழுதிய ஓவியக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. நீ நிறைய ஸ்தலங்களை வரையப் போகிறாய். அவை நீ வரைந்ததாலேயே ஆழ்வார், நாயன்மார், பாசுரங்கள் புகழ்பெற்றதுபோல், சில்பி வரைந்த ஸ்தலங்கள் என்று புகழ் பெறும் என்று காஞ்சி மகாஸ்வாமிகள் சில்பியை ஆசீர்வதித்ததாக, சில்பியின் பக்தராக விளங்கும் டாக்டர் எம்.வி.ஆச்சால் குறிப்பிட்டிருக்கிறார். அரசாங்கமே கலை இலக்கிய நன்றியுணர்வோடும், பண்பாட்டுக் கடமையுணர்வோடும் செய்ய வேண்டிய திருப்பணி இது. ஆனந்தவிகடன் நிறுவனம் அப்படியோர் அறப்பணியாகவே இதை வெளியிட்டிருப்பதற்காகப் பாராட்டலாம். சில்பியின் சமகால ஓவியரான கோபுலுவும், சில்பியின் சீடராக இருக்கும் பேறுபெற்றவரான ஓவியர் பத்மவாசனும் பகிர்ந்துகொண்டுள்ள அனுபவங்கள் விலைமதிப்பற்றவை. சில்பி பேசிக்கொண்டிருக்கும்போது காகம் கரையுமாம். பேச்சை நிறுத்திவிட்டு பொறு அது பேசி முடிக்கட்டும் என்பாராம். எத்தகைய இயற்கையோடு ஒன்றிய மனவளம் அவருக்கு. சில்பி மீதும் பொறாமை கொள்ள ஒருவரால் முடியுமோ? மகாப்பெரியவாளிடம் அப்படி ஒருவர் கேட்டுவிட்டார். மகாப்பெரியவாள் சொன்னது, ஆமாம் அவன் அவதாரம்தான். தேவலோகத்துலே இருந்து இதுக்குன்னே வந்தவன். அவனுக்காக தெய்வங்கள் எல்லாம் காத்துண்டிருக்கு. தாம் தெய்வங்களை வரைவதற்கான காரணம் பற்றிக் கேட்டபோது, இப்படிப் பெரியவா சொன்னதுக்கு அப்புறம் எனது பிறப்பே இதுக்குத்தான்னு புரிஞ்சதுக்கு அப்புறம் தெய்வங்களை வரையாமல் வேறு எதை வரையறது? என்றாராம் சில்பி. முழுமையான கலைக் காணிக்கையாக, விகடனுக்கு அப்பாலும் சில்பி வரைந்து குவித்துள்ள சித்திரங்களை எல்லாம் சேர்த்து வெளியிடக்கூடிய மனவளம் யாருக்காவது அமையாதா என்னும் ஏக்கம் தவிர்க்க முடிவதில்லை. ஒரு கனவை விகடன் நிறைவேற்றியதுபோல் இன்னொரு கனவையும் யார் நிறைவேற்றப் போகிறார்கள்? பவித்ரமான ஒரு தொகுப்பு. ஒரு மஹாசமுத்திரம் மாதிரி. பக்தியோடும் கலை ரசனையோடும் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வேண்டிய சித்திரங்கள், கட்டுரைத் தொடருக்கு தென்னாட்டுச் செல்வங்கள் என்று மகுடமிட்டவரையும் பாராட்டிக் கைதொழத்தோன்றுகிறது. வயதானவர்கள், எல்லா க்ஷேத்ரங்களுக்கும் போக முடியவில்லையே என்று ஏங்குகிறவர்கள் உண்டு. அவர்கள் மடியில் வைத்துக் கொண்டு பக்கங்களை வருடி அனுபவிக்க வேண்டிய கருவூலம் இது. – சுப்ரபாலன். நன்றி : கல்கி, 28 ஏப்ரல் 2013.