தென் ஆப்பிரிக்கா பயண அனுபவங்கள்
தென் ஆப்பிரிக்கா பயண அனுபவங்கள், கலைமாமணி யோகா, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ.
நட்பின் பெருமை பேசும் ஒரு பயண நூல் தென் ஆப்பிரிக்கப் பயண அனுபவங்கள் என்று தலைப்பிட்டிருந்தாலும் இந்த வித்தியாசமான நூலில் நீண்ட கலமாக நிலவிவருகிற நட்பின் பெருமையை நினைவு கூர்கிற பகுதிகள் அதிகம். 1970, 1990 ஆண்டுகளில் அறிமுகமான நண்பர்களை 2011, 12 ஆண்டுகளிலும் அதே பாசத்துடன் சந்திப்பது என்பது அதிகம் பேருக்குக் கிடைக்க முடியாத பேறு. அப்படிப்பட்ட அரிய வாய்ப்புகளைப் பெற்றதோடு அந்த நினைவுகளைப் படப்பதிவுகளாகவும் செய்து இத்தொகுப்பில் சேர்த்திருப்பது யோகாவைத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. திரைப்படப் பிரமுகர்கள் பலரைச் சந்தித்துப் பேட்டி கண்டு தென் ஆப்பிரிக்க பத்திரிகைகளில் வெளியிட்ட ஷான் பிள்ளையோடும் மற்றவர்களோடும் ஆசிரியர் கொண்ட நட்பின் ஆழம் உயர்வானது. காலவெள்ளத்தில் சிலர் பொருளாதார நிலையில் தாழ்வு நிலை அடைய நேர்ந்தபோதிலும் அவர்களை மறவாமல் சந்தித்து மரியாதை காட்டியதைச் சொல்லும் பகுதிகள் படிப்போரை நெகிழச்செய்யும். தென் ஆப்பிரிக்காவில் சுவாமி சிவானந்தாவின் சீடர் ஒருவர் அவருக்காக நிறுவியுள்ள ஆசிரமத்தையும் பிரார்த்தனைக் கூடத்தின் எதிரேயுள்ள திருக்குளத்தில் நம்முடைய பாரதத்தின் பெருமைக்குரிய கங்கை நதியிலிருந்து கொண்டுபோன பவித்திரமான நீரைச் சேர்த்துப் புனிதப்படுத்திப் பாதுகாக்கிறார்கள் என்பது பலரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி. பீட்டர் மாரிஸ்பர்க் ரெயில் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட நம்முடைய தேசப்பிதா காந்தியடிகள் தங்க வைக்கப்பட்ட அறையைப் பாதுகாக்கிறார்கள். அங்கு தென் ஆப்பிரிக்கப் புரட்சிவீரர் நெல்சன்மண்டேலா திறந்துவைத்த பாபுஜியின் உருவச்சிலை பற்றிய விவரங்களையும் ஆசிரியர் இந்த நூலில் தந்துள்ளார். -சுப்ர. பாலன். நன்றி; கல்கி, 8/3/205