தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள்

தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் கா. மணிகண்டன், சைந்தவி, பக். 239, விலை 225ரூ.

தொல்காப்பியம் தமிழின் மிகப் பழைய இலக்கண நூல். எழுத்து, சொல், இலக்கணத்தோடு வாழ்க்கைக்கும்(பொருளுக்கும்) இலக்கணம் வகுத்த நூல். தொல் காப்பியத்தில் காணும் அறிவியல் சிந்தனைகளை நுணுகி ஆராய்ந்து, அறிந்து உணர்ந்த செய்திகளை, ஆசிரியர் விரிவாக்கி விளக்கி இந்நூலில் வழங்கியுள்ளார். நிலம், நீர், வளி, தீ, விசும்பு கலந்த மயக்கம் இவ்வுலகம் எனும் கருத்தும், செடி, கொடி வகையை உயிர்கள் வகையில் பிரித்திருப்பதும், பேச்சொலிகளின் அளவுகளை ஆய்ந்து கூறியுள்ள திறனும் மெய்ப்பட்டியலில் காணும் உளவியல் கருத்துகளும், நூலில் பரந்து காணப்படும் விலங்கியல், தாவரவியல் கருத்துகளும் படித்து மகிழத்தக்கன. தொல்காப்பியம் காட்டும் நிலப்பிரிவுகளிலும், காலப் பிரிவுகளிலும் அறிவியல் அடிப்படையில் அமைந்தவையே. எண்ணுப் பெயர்களில் காணப்படும் கணிதவியல் செய்திகளும் அறிவியல் அடிப்படை கொண்டவையே. ஐந்தே பிரிவுகளில் மிக ஆழமான கருத்துகளை அழகாக நல்ல நடையில் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார். முனைவர் பட்ட ஆய்வுக்காக எழுதப்பட்ட இவ்வேடு, புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஆதலின் இவ்வாய்வு நூலுக்கு ஆதாரமான நூல்களின் பட்டியலும், நூலாசிரியர்கள் பட்டியலும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. ஆய்வாளர்கள் மட்டுமின்றி தமிழ் ஆர்வலர் யாவரும் படித்துச் சுவைக்கலாம். -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 11/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *