மாற்றங்களை ஏற்போம்
மாற்றங்களை ஏற்போம், ரா. சொக்கலிங்கம், மனிதத்தேனீ பதிப்பகம், பக். 132, விலை 50ரூ.
பொது அமைப்புகள், கல்வி நிலையங்கள், இலக்கிய, ஆன்மிக, அரசியல் கூட்டங்கள் என, இதுவரை 15 ஆயிரத்து 500 மேடைகள் கண்டவர் மனிதத்தேனீ சொக்கலிங்கம். மேடை பேச்சை முழுநேரத் தொழிலாக கொண்டுள்ள இவர், மூன்றாண்டுகளாக மேடைகளில் முழங்கியவற்றில் சிலவற்றை தேர்வு செய்து 40 கட்டுரைகளாக தந்துள்ளார். கட்டுரைகளை அறிவியல், மொழி, ஆளுமை, தன்னம்பிக்கை, சுற்றுலா, ஆன்மிகம், சுற்றுச்சூழல், மருத்துவம், ஊடகம், அரசியல் என வைகப்படுத்தி தந்திருப்பது சிறப்பு. மேடைப் பேச்சாளர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். -ஜீ.வீ.ஆர். நன்றி: தினமலர், 18/5/2014.
—-
இந்திய மொழிகள், முனைவர் ச. அகத்திய லிங்கம், மெய்யப்பன் தமிழாய்வகம்.
உலகில் உள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை, இந்திய மொழிகள், அவற்றின் தோற்றம், பேசுவோர் எண்ணிக்கை, மொழிகள் மூலம் முத்திரை பதித்த கவிதை, உரைநடை, காவியங்கள், நாடகங்கள், உணர்ச்சிப்பாடல்கள் என அரிய பல தகவல்கள் இந்த நூலில் உள்ளன. இந்தியா மிக பழமையும், பண்பையும், பாரம்பரியத்தையும் கொண்ட பல மொழிகளுடன் பெருமை கொண்டது. அதில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் செவ்வியல் மொழிகள். இன்றைய பேச்சு மொழிகளான இந்தி, வங்காளி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் தோன்றிய 2500 ஆண்டுக்கு முந்தைய வரலாறு இந்த நூலில் ஆராயப்பட்டுள்ளது. நாட்டின் பண்டைய மொழி நிலை, சமுதாய நிலை, பண்பு, பாரம்பரிய உருவாக்கம், திராவிட மொழிக்கும் உலக மொழிக்கும் இடையே இருந்த உறவு ஆகியவையும் இதில் பேசப்பட்டுள்ளன. ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகரில் உள்ள நூலகத்தில் இந்த நூல் படிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 18/5/2014.