பத்துப்பாட்டில் வருணனை மரபுகள்
பத்துப்பாட்டில் வருணனை மரபுகள், முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 312, விலை 225ரூ.
தரமான, அரிதான, செம்மொழி சார்ந்த, நல்ல இலக்கியப் படைப்புகளை வெளியிடுகின்ற மரபை வழக்கமாய்க் கெண்டுள்ள பதிப்பகம் சேகர் பதிப்பகம். பிழை இல்லாது, நல்ல, எளிய கட்டமைப்போடும் நூல்களை வெளியிடும் பாங்கு நேர்த்தியானது. இந்த வரிசையில் நூலாசிரியர் முனைவர் ச.பொ. சீனிவாசன் எழுதிய, பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் என்ற நூலை வெளியிட்டுள்ளார். வருணனை என்னும் சொல் வடமொழித் தழுவல். எனினும் வேறு பெயர்களில் தமிழில் வழங்கியுள்ளதையும் ஆசிரியர் பல அகராதிகள் துணைகொண்டு (பக்கம் 7) விளக்கியுள்ளார். சங்கத் தொகை நூல்களுள் எட்டுத்தொகை நூல்களை விட பத்துப்பாட்டு நூல்கள்தான் அந்தச் சொல்லுக்கேற்ற பொருளுடன் விளங்குவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் பத்துப்பாட்டின் வருணனை மரபுகளைத் தன் ஆய்விற்கு நூலாசிரியர் எடுத்துள்ளார். இலக்கியத்தில் வருணனை, பத்துப்பாட்டு வருணனைக் கூறுகள், பகுப்பாய்வு, பத்துப்பாட்டு வருணை மரபுகளும் வெளியீட்டு உத்திகளும் பத்துப்பாட்டு எட்டுத்தொகை வருணனைக் கூறுகள், ஒப்பீடு, முடிவுரை, துணை நூல் பட்டியல் என, ஏழு தலைப்போடு நூல் நிறைவடைகிறது. நிலம், பொழுது, இறைவன், மகளிர், உணவு, மரங்கள், செடி கொடிகள், புல்பூண்டு, மலர், தொழில்கள், இசைக் கருவிகள், ஊர், நகர், ஆறு, உவமை உத்திகள் என, பல தலைப்புகளை ஆய்ந்து தொடர்புடைய பத்துப்பாட்டுச் செய்யுள்களின் (வரி குறித்து) மேற்கோள்களுடன் விளக்கியிருப்பது நூலாசிரியரது கடின உழைப்பில், இலக்கிய ஆர்வமும், புலமையும் நன்கு புலப்படுகிறது. இந்நூல் இலக்கண இலக்கிய ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயன்தரவல்ல தரமான நூல். -குமரய்யா. நன்றி: தினமலர், 11/5/2014.