சரித்திரப் பிழைகள்

சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், சென்னை, விலை 120ரூ.

மந்திரச் சிமிழில் வெளிப்பட்ட கனல் ஓர் எழுத்தாளர் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிவுசெய்வது அரசியல் அறம் சார்ந்த சிறப்பம்சம். அது எழுத்தாளரைக் கூர்மைப்படுத்தும் ஓர் அறமும் ஆகும். அதே சமயம் அரசியல் ஆதாரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு இது ஒரு கெட்ட கனவு. இன்று தூய படைப்பாளி என்று தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் அரசியல் சாயல் படாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். அர்ஷியா அந்த பாவனைகளைக் களைந்து தன்னைப் பாதிக்கும் பல விஷயங்களை எழுதியிருக்கிறார். சிறுகதைகள், நாவல்களை எழுதும் முன்பு அவர் ஒரு பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர். அவருடைய முதல் அவதாரத்திலிருந்து கனலை அப்படியே சேமித்துவைத்து இப்போது கொட்டியிருக்கிறார். பளியர் இன மக்கள் வாழ்நிலையிலிருந்து யானைமலையின் அரசியல் அந்தரங்கங்களை அலசி ஆராய்ந்து பின் முஸ்லிம் மாணவிகளின் இடைநிற்றல் கல்விவரை பல விஷயங்களையும் எழுதியிருக்கிறார். மதுரையருகிலுள்ள யானைமலையில் ஒரு பிரதிக் கோயிலும் கலைப்பூங்காவும் அமைக்கலாம் என்று 2009ல் தமிழக அரசு சிந்தித்தது. அது இயற்கை உபாசகர்களின் தீராத கலைத் தாகம் அல்ல. நாட்டின் வளங்களையெல்லாம் ஒரு மந்திரிச் சிமிழில் அடைத்துக்கொள்ள விரும்பிய சுரண்டல் திட்டம் அது. அப்போது மதுரைவாசிகளும் பல அரசியல் கட்சிகளும் திரண்டெழுந்து போராடி சுரண்டல் பூதத்தை அடைத்துவைத்தார்கள். இதிலிருந்த அரசியலைத் தோலுரிக்கும் அர்ஷியா, யானைமலையின் தொன்மங்களையும் தலபுராணங்களையும் நேர்த்தியாக விவரிக்கிறார். திருவிளையாடல் புராணம், நரசிங்கப் பெருமாள் ஸ்தோத்திரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள யானை மலையையும் சேர்த்து நமக்கு அறிமுகம் செய்கிறது கட்டுரை. சத்தற்ற அரசியல் எதிர்ப்புக் கோஷமாக ஒரு பிண்டம்போலக் கட்டுரை விழுந்துவிடாமல் காப்பாற்றிய அந்தத் தொனி, பரமக்குடி தலித்துகளின்மீது காரணம் இல்லாமல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் மீதும் தொடர்கிறது. அங்கு சென்ற உண்மை அறியும் குழுவில் ஒருவராக இருந்து அவர் தெரிந்துகொண்ட உண்மைகளை நம்மோடு ஆதியந்தமாகப் பகிர்கிறார். சில உண்மைகளைப் பேசாமல் மறைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தும் அந்த மூடுதிரையை நீக்கிப் பார்த்துள்ளார். கமல்ஹாசனின் உனக்குள் ஒருவன் பற்றி எழுதிய யார் இந்த காமன்மேன்? கட்டுரை அதில் கலந்துவிடப்பட்ட நச்சுப் பொருளை அதிதீவிரமாகப் புடைத்து எடுக்கிறது. பொதுச்சமூக வெளியில் கலந்துவிட்டால் அந்தக் கண்ணோட்டங்களில் தன் சமூகத்திற்காகப் பேசும் அதே தார்மீக நெறி, தன் சமூகத்தின் இருட்டுச் சிந்தனைகளையும் கண்டிப்பதில்தான் நிறைவுபெற முடியும். முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஓர் ஊரில் முஸ்லிம் மாணவிகளின் படிப்பு இடையிலேயே நின்றுபோகிறது. இதற்குச் சமூகத்தின் உள்ளிருந்து கிளப்பப்படும் புரளிகள் காரணமாகின்றன என்று தெரிய வருகிறது. காஷ்மீரத்துப் பெண் ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்று நிர்வாகத் துறைக்குள் வந்தால் இந்த முல்லாக்கள் என்ன செய்யப் போகின்றார்களோ என்று திக்கடிக்கிறது எனவும் ஓரம் சாய்ந்துவிடாமல் அர்ஷியா எழுதுகிறார். -களந்தை பீர்முகம்மது. நன்றி: தி இந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *