தொல்காப்பியத்தில் இசை
தொல்காப்பியத்தில் இசை, ஏழிசை இசை ஆய்வகம், தமிழ்க்கலையகம், மயிலாடுதுறை, விலை 350ரூ.
தமிழிசையின் தொன்மையையும், தனித்தன்மையையும் தக்க சான்றுகளுடன் நிலைநாட்டும் ஓர் அரிய ஆய்வு நூல். தொல்காப்பியம் தொடங்கிச் செவ்வியல் இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் காணப்படும் இசைக்குறிப்புகள் குறித்த விரிவான ஆய்வு நூலாக விளங்குகிறது. இசை, பாவகை, பண்புகள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசை அழகணிகள், இசைக் கலைஞர்கள், கூத்துக்கள் ஆகிய எட்டுத் தலைப்புகளின் கீழ் தொகுத்தும், வகுத்தும் தந்திருக்கும் செய்திகள், ஆய்வு முடிவுகள் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக விளங்குகின்றன. இலக்கண ஆய்வுகள் குறைந்து வரும் இன்றைய கல்விச் சூழலில் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு இசையில் தொன்மையை ஆராய்ந்துள்ள முனைவர் இராச. கலைவாணி தமிழிசை ஆய்வு வரலாற்றில் வலுவான தடம் பதித்திருக்கிறார். இதை தமிழ் கூறும் நல்லுலகம் பெரிதும் வரவேற்கும். நன்றி: தினத்தந்தி, 10/9/2014.
—-
ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் விளக்கவுரை, ப. ராமலிங்கம், சர்வமங்களா ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆசிரமம், நங்கநல்லூர், பக். 412.
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், 142 சுலோகங்களின் பொருளை, குரு சீடர் வினா விடை மூலம் விளக்கம் தருகிறது இந்த நூல். தர்மபுத்திரருக்கு அம்புப் படுக்கையில் இருந்தபடி பீஷ்மர் சொன்ன கண்ணனின் பெருமையே இவை. 13 சுலோகங்கள் முன்னுரையாகவும், விஷ்ணு சகஸ்ரநாமத்தின், 107 சுலோகங்களாகவும், மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள், 107 சுலோகங்களாகவும் உள்ளன. சிஷ்யனின் கேள்வி- ஒவ்வொரு உடம்பிலுள்ள ஜீவனிலும் பகவான் இருக்கிறார். ஆனால் ஜீவன் அழிந்துவிடுகிறதே ஏன்? குருவின் விடை- பகவான் அழிவது இல்லை. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் அக்ஷர(17) அழியாதவன் என்று ஆண்டவன் கூறப்பட்டுள்ளார் (பக். 10). பெருமாளின் சங்கு பாஞ்சஜன்யம், வாள் நந்தகம், வில் சாரங்கம், கதை கவுமோதகி இருந்தாலும், சுதர்சன சக்கரத்தையே தயாராக வைத்துள்ளதால், ரதாங்கபாணி (998) என்று அழைக்கிறோம். (பக். 409) விரிவான விஷ்ணு சகஸ்ரநாம விளக்கநூல். -முனைவர் மா.கி.ரமணன். நன்றி: தினமலர், 7/9/2014.