நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள்
நம் வாழ்வோடு இணைந்த 100 மரங்களின் பயன்கள், முனைவர் பி. சாந்தன், மணிமேகலைப் பிரசரம், பக். 288, விலை 120ரூ.
மனிதர்கள் உள்பட பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழத் தேவை பிராணவாயு. இதைத் தருவது பச்சையம் உள்ள மரங்களே. எனவே, ஒவ்வொரு வரும் ஏதேனும் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தாவர வளத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், சுமார் 1000 வகையான தாவரச் சிற்றினங்களை கண்டறிந்துள்ளதோடு, மூலிகைப் பண்ணை, உலர் தாவரத் தொகுப்பு (ஹெர்பேரியம்) போன்றவற்றை உருவாக்கி, பராமரித்து வருகிறார். இந்நூலில் நம் வாழ்க்கையோடு இணைந்த 100 மரங்களைப் பற்றிய பல்வேறு தகவல்களைப் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு மரத்தின் தமிழ்ப் பெயர், தாவரவியல் பெயர், அது சார்ந்த தாவரக் குடும்பம், இதனுடன் நெருங்கிய வேறு தாவரங்கள், இவை வளரும் சூழல், மண் வளம்… என்று பல தகவல்களுடன், மரத்தின் உடலமைப்பு, அவற்றின் ரசாயனப் பொருட்கள், காய், கனி, இலை, பட்டை ஆகியவற்றின் மருத்துவப் பண்புகள் மற்றும் பயன்பாடுகள் போன்றவையும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. அத்திமரம், ஆலமரம், இலந்தை மரம்… என்று அகர வரிசையில் ஒவ்வொரு எழுத்திற்கும் உரிய பல்வேறு மரங்கள் குறித்து, அவற்றின் புகைப்படங்களுடன இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவத் துறையினருக்கும், மரங்களை பற்றி அறிய ஆர்வமுள்ள விவசாயிகளுக்கும் இந்நூல் பெரிதும் பயன் தரத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக், 14/10/2015.