நரேந்திர மோடி
நரேந்திர மோடி, எஸ்.பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த்சென்ஸ், பக். 200, விலை 125ரூ.
இன்றைய அரசியலின், சர்ச்சைக்குரிய மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய முகமாக பார்க்கப்படுவது மோடிதான். அவரது பிறப்பில் இருந்து, தற்போதைய பிரதமர் வேட்பாளர்வரை, அனைத்து விஷயங்களையும் இந்த புத்தகம் விளக்குகிறது. கோத்ரா கலவரம் தொடர்பாக, டில்லியில் உள்ள சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை அமைத்த நீதிபதி திவத்தியா குழுவின் விசாரணை முடிவுகளில் முக்கியமானவற்றை ஆசிரியர் இதில் சேர்த்திருக்கிறார். மேலும் 1964 முதல் 2002 வரை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்கள், அவை நடந்தபோது அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது என்று சுட்டிக் காட்டி, மோடி மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளில் அர்த்தம் இல்லை என்பதை நிறுவ முயன்றுள்ளார். குஜராத் பற்றியும், மோடி பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு, இந்த புத்தகம் மிகவும் உதவும். நன்றி: தினமலர், 27/4/2014.
—-
நடப்பதுவே பறப்பதுவே, என். ராஜசேகர், சேகர் பதிப்பகம், பக். 168, விலை 120ரூ.
பாரதியாரின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்த கட்டுரைத் தொகுப்பு, மிகச் சிறந்த புத்தக வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய புத்தகம். ஓய்வு பெற்ற இ.ஆ.ப. வான, இந்த நூலாசிரியரின் கல்வியறிவும், பணி அனுபவ ஞானமும் வாசகனைத் தன்னுள்ளே வரித்துக் கொள்ளும் வசீகரமானது. காக்கை, குருவி, புலி, சிங்கம், நாய், பூனை என ஐந்தறிவு ஜீவன்களை ஆறறிவு படைத்த மனித இனத்தின் ஆசானாக்கிக் கொண்டாட வைக்கிறார் என். ராஜசேகர். இவருடைய மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம். சுவைபட எழுதப்பட்டுள்ள சுவாரஸ்யமான புத்தகம். -ஜனகன். நன்றி: தினமலர், 27/4/2014.