நல்லவங்க அரசியலுக்கு வாங்க
நல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 75ரூ.
வரலாற்றுப் பேராசிரியரும், மாவீரன் நேதாஜி கல்வி நிறுவனங்களின் தலைவருமான இந்நூலாசிரியர், நல்லவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார். இன்றைய அரசியலில் சுயநலம், சந்தர்ப்பவாதம், ஊழல், வன்முறை போன்றவை தலைவிரித்தாடும் நிலையில், நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டால் நாடு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதோடு, சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிவிடும் என்று கூறும் ஆசிரியர், நல்ல தலைமைக்கு எடுத்துக்காட்டாக நான்கு தலைவர்களைப் பற்றி இந்நூலில் பதிவு செய்துள்ளார். பெருந்தலைவர் காமராஜ், உத்தமர் பி. கக்கன், தோழர் ப. ஜீவானந்தம், மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பொது வாழ்க்கை குறித்த சுருக்கமான செய்திகளுடன், அவர்களின் அரசியல் தூய்மை, தன்னலமற்ற தொண்டு, நாட்டுப்பற்று, நல்லாட்சி, அர்ப்பணிப்பு உணர்வு போன்ற பண்புகளும், செயல்பாடுகளும் தனித்தனியாக விளக்கியுள்ளார். தவிர, இவர்களைக் குறித்து மற்ற தலைவர்கள் கூறிய கருத்துக்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பொதுவாக நல்ல தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள், குணாதிசயங்களைப் பற்றி சான்றோர்களின் கருத்துக்கள், அரசியல் விழிப்புணர்வுக்கு ஊடகங்கள் ஆற்றவேண்டிய பங்கு, நல்லாட்சிக்குத் தேவையான நிர்வாகச் சீர்திருத்தங்கள், தேர்தல்களில் மக்கள் எத்தகையவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களும் இந்நூலில் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. -பரக்கத். நன்றி: துக்ளக், 16/12/2015.