நல்ல நிலம்
நல்ல நிலம், பாவை சந்திரன், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ.
இது கடலோர கிராமங்களின் கதை! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023772.html கீழ்த்தஞ்சை மாவட்டத்தின் கடலோரம் அமைந்துள்ள இலுப்பூர், மங்கலம் ஆகிய கிராமங்களின் எளிய மக்களைப் பற்றியது இந்த நாவல். கி.பி. 1895 – 1896ல் துவங்கிய, நூறு ஆண்டுகளை நாவல் கடக்கிறது. யூனியன் ஆட்சியில் வாழ்ந்த மக்களின் எல்லைப்புறத்தில், பிரெஞ்சு ஆட்சி நடந்து கொண்டு இருந்த சூழ்நிலையில், நாவல் துவங்குகிறது. நாவலின் நாயகி காமு என்னும் காமாட்சி, பொறுமையில் பூமாதேவி. தான் பிறந்த கிராமத்தை விட்டு ஒரு அடி கூட வெளியில் வைக்காதவள். சுப்புணி என்னும் சுப்பிரமணியுடன் அவளுக்குத் திருமணம். சுப்புணி ஏற்கனவே திருமணமாகி கையில் ஒரு குழந்தையுடன் இருப்பவன். இருப்பினும் நிறைவான மனதுடன் சுப்புணி கட்டும் தாலியைக் கழுத்தில் வாங்கிக் கொள்கிறாள். அன்று துவங்கி சுப்புணியின் கருவை இரண்டாம் முறையாகச் சுமந்து இனிய கனவுகளுடன் இருக்க, தான் கருவுற்று இருப்பதை இன்று சொல்லலாம். நாளை சொல்லிக்கொள்ளலாம் என்றிருக்கையில், சுப்புணி திடீரென்று காணாமல் போய்விடுகிறான். அதேநேரத்தில் கிராமத்தில் ஒரு கொலையும் நடந்துவிடுகிறது. அன்றிலிருந்து அவள் படும் துயரங்கள், அவற்றை தனி ஒருத்தியாக, நெஞ்சுருதியுடன் சமாளித்த விதம் அவளைப் பொறுமையில் பூமாதேவி என, சொல்லவைக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் நிகழும் இந்த கதையில் தமிழக வரலாறு, ஆங்காங்கே ஆவணப்படுத்தாமல் வந்து போகிறது. கடலோரக் கிராமங்களின் கதை இது. ஆதலால், அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், புயல் சீற்றங்களின் போதும், கடல்நீர் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் உப்பு படிந்து பாழ்படுத்துகிறது. அவற்றை மீட்டு எடுக்க விவசாயிகள் படும்பாட்டை மிகத் தத்ரூபமாக வர்ணிக்கப்பட்டிருப்பது சிறப்பு. நூலின் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், இன்று அமரராகிவிட்ட கோபுலுவின் சித்திரங்கள். தன் அற்புதக் கைவண்ணத்தில் நாவலின் பாத்திரங்களைப் பேச வைத்திருக்கிறார். பிராமணர் அல்லாத ஜாதியின் கதாபாத்திரங்களை இவ்வளவு தத்ரூபமாகவும் அருமையாகவும் தீட்ட அவர் ஒருவரால்தான் முடியும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. தமிழில் இதுவரை ஆயிரக்கணக்கான நாவல்கள் வெளிவந்து இருக்கின்றன. அவற்றில் கிளாசிக் எனப்படும், மிக உயரிய தரத்தில் அமைவது மிகச் சிலவே. அந்த மிகச்சில கிளாசிக் நாவல்களில் நல்ல நிலமும் ஒன்று. இதற்கு தமிழக அரசின் முதல் பரிசும், கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் முதல் பரிசும் கிடைத்திருப்பது ஆச்சரியமல்ல. -கே.சி. நன்றி: தினமலர், 23/8/2015.