நவக்கிரகஹங்கள்
நவக்கிரகஹங்கள், உமா ஹரிகரன், லட்சுமி மந்திர், பீச், ஆலப்புழை 688012, கேரளா மாநிலம்.
இந்து சமய புராணங்களில் நவக்கிரகங்களின் ஆதிக்கம், தாக்கம் மற்றும் குணாதிசயங்கள் மற்றும் ஒவ்வொரு ராசியிலும் தான் இருக்கும் இடத்தில் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்ட நூல். ஆண்டவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கோவில்களின் மூலமாகத்தான் அருள் பாலிக்கிறான். கோவிலில் உள்ள மூர்த்தியின் மூலமாகத்தான் அருள் கிடைக்கிறது. இது இந்து சமயத்தின் ஒரு மரபு. அந்த அடிப்படையிலே தமிழகத்திலேயே நவக்கிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளன. சூரியன் ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும், சந்திரன் ஐஸ்வர்யத்தையும், அங்காரன் (செவ்வாய்) நல்ல புத்தியையும், புதன் படிப்பையும் அந்தஸ்தையும், குரு பேச்சு திறமையையும், சுக்கிரன் எப்போதும் சந்தோஷத்தையும், சனி புஜபலத்தையும், ராகு, கேது குலத்தின் அபிவிருத்தியையும் கொடுக்கக்கூடிய பெருமை வாய்ந்த நவக்கிரகங்கள் என கூறப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகவும், பல அரிசய விஷயங்களை தனது கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டு இந்துக்களுக்கு ஒரு அரிய பொக்கிஷமாக கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் உமாஹரிகரன். கிரகங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய புத்தகம். ஜோசியர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. பெரிய அளவில் 451 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ380 என்பது மிகக்குறைவு.
—-
தமிழ் கவிதைகளில் பெண்கள், எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 250ரூ.
சங்க காலம் முதல் தற்காலம் வரை வெளிவந்துள்ள கவிதைகளில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து ஆய்ந்து எழுதப்பட்டுள்ள நூல். தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதி, கண்ணதாசன், உள்ளிட்ட புலவர்கள் எந்த கண்ணோட்டத்தில் பெண்களை பார்த்துள்ளனர் என்பதை நூல் விளக்குகிறது. சங்க கால இலக்கியங்கள் பெண்களை தெய்வங்களாக போற்றி வந்த நிலையில், வரதட்சணை, சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற அவலங்களால் பெண்கள் அடைந்துவரும் கொடுமைகளை தற்கால கவிதைகள் விளக்குகின்றன. நன்றி: தினத்தந்தி, 4/9/2013.