நாடு படும் பாடு
நாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ.
கல்லூரி முதல்வராகவும், பத்திரிகையாளராகவும், அமெரிக்கத் தூதரக அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய இந்நூலாசிரியர், தமிழிலும், ஆங்கிலத்திலும் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பத்திரிகைகளில் எதையும் தெளிவாகவும், துணிவாகவும் எழுதும் அரசியல் விமர்சகர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. இந்நூலில் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் போன்றவை குறித்து துக்ளக் உட்பட பல பத்திரிகைகளுக்கு எழுதியவற்றில், சிறப்பான 51 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸின் கடந்த கால ஆட்சி குறித்த இவரது கடுமையான விமர்சனங்கள், இவர் பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளரோ என்று தோன்றும். அதே சமயம் பா.ஜ.க.வின் குறைகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும்போது அந்த எண்ணம் மாறும். இப்படி ஒரு நடுநிலைத் தன்மையை இவரது கட்டுரைகளில் பரவலாகக் காணலாம். இந்நூலிலுள்ள எவ்வளவு எதிர்பார்பப்புகள் என்ற முதல் கட்டுரையில், நம் நாட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொது இடங்களில் காட்டும் பந்தாக்களை எல்லாம் விவரித்துவிட்டு அதற்கு நேர்மாறாக தற்போதைய ஸ்விட்சர்லாந்து நாட்டு ஜனாதிபதி, அரசுப் பயணமாக சீனாவுக்கு ஒரு சாமானியனைப் போன்று சென்றதை விவரித்து ஒப்பிட்டுள்ளார். இது நாம் இன்னும் முடியாட்சிலிருந்து ஜனநாயகத்திற்கு வரவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுபோல மத்தியில் நேரு முதல் மோடி வரையிலும், பிற மாநில முதல்வர்களின் செயல்பாடுகளையும் நம் நாட்டு அரசியல், சமுதாய, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்தும் விருப்பு – வெறுப்பு இன்றி விமர்சிக்கும் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 29/7/2015.