நாளைய பொழுது உன்னோடு
நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், விலை 90ரூ.
திண்ணைகளால் நிரம்பிய கும்பகோணம் அவள் சென்ற பாதையில் அவன் கண்களும் சென்றன. அவள் மீது பதித்த பார்வையை எடுக்கக் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. இப்படியெல்லாம் சற்றும் விரசமில்லாமல் எழுதி ஒரு வித்தியாசமான காதல் கதையைத் தந்திருக்கிறார் ஜனகன். கும்பகோணத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் அமெரிக்காவுக்குப் போக நேர்ந்த இருவர் காலங்கடந்த காலத்தில் காதல்வயப்பட்டுக் கல்யாணமும் செய்து கொள்வதுதான் கதை. சீர் முறுக்கைப் பற்றிய வர்ணனை, சாப்பிடிப் பிடிக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த முறுக்கில் இருக்கிற கிராஃப்ட்ஸ்மன்ஷிப்பைப் பாருங்கோ என்கிற நயம். சம்ஸ்கிருத மொழியின் பெருமைகளைப் பற்றி அமெரிக்க மண்ணில் வியக்கிற கதைப்போக்கை முகம் சுளிக்காமல் படித்தால் அனேக உண்மைகளைப் புரிந்து கொள்ளமுடியும். முழுக்க முழுக்க பிராமணக் குடும்பம், அதன் பாரம்பரியமான பண்பாடுகள் இவற்றைப் பற்றியே சுற்றிச் சுழலுகிறது கதை. கதை முழுவதும் வளையவருகிற தோழுந்தூர் மாமி கற்பனைப் பாத்திரம் என்று சொன்னால் நம்புவது சிரமம். அப்படியே கௌரவமான கதாநாயகியாகப் பரிணாமம் பெறும் துளஸி. பௌத்தர்கள் சமஸ்கிருதத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு பாலி மொழியில் தங்கள் புத்தகங்களை எழுதிப் பிரசாரம் பண்ணினாங்க. அதுக்குப் பிறகுதான் சமஸ்கிருதத்தோட பெருமை பின்னுக்குப்போயிடுத்து. இது விவேகானந்தரே சொன்னது என்றும், அமெரிக்கச் சாலைகளைப் பார்த்துவிட்டு நம்மூரை நினைத்து வாய்பிளக்கிற கதாநாயகனிடம் சலிச்சுக்காதே செகண்ட் வேர்ல்ட் வார் முடிஞ்சவுடனே ராணுவ வீரர்களுக்கு வேலை எதுவும் இல்லே. சும்மா உட்கார்த்திவச்சு சம்பளம் கொடுத்துச் சோம்பேறியாக்க விரும்பாமெ, இராணுவத்தைப் பயன்படுத்தி இந்த ரோடுகளையெல்லாம் போட்டார் அப்போ அதிபரா இருந்த ஐஸன்ஹோவர் என்றும் கதைப்போக்கில் வருகிற செய்திகள் சுவாரசியமானவை. இந்தியர்களின் மனப்போக்கைச் சாடுகிற தொனி கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது. சும்மா இருப்பதும் சோம்பலில் திளைப்பதுமாய் இருந்த மக்களைத் திண்ணைகளால் நிரம்பிய கும்பகோணத்தில் வாழ்ந்த நாட்களில் பார்த்த ஞாபகம் வந்தது இங்கே கும்பகோணத்தை ஒரு குறியீடாய்த்தான் கொள்ளவேண்டும். எல்லாத் தமிழகக் கிராமப்புறங்களின், குறிப்பாக அக்கிரகாரங்களின் அன்றைய நிலைதான் இது. கும்பகோணம் டிகிரி காப்பி, காமாட்சி ஜோசியர் தெரு, காவிரிக்கரை, சங்கரமடம் எல்லாம் படுசுவாரஸ்யம். அதுவும் அமரிக்கனாகிவிட்ட இந்தியக் குழந்தை சித்பா என்று கூப்பிடுகிற அழகு ஒன்றுபோதும். சங்காச்சாரியார் போன்ற ஞானிகளுக்கும் தெய்வங்களுக்கும் அபிவாதன நமஸ்காரம் செய்வதில்லை. பக். 4ல் அபிவாதயே சொன்னான் என்றிருப்பது சரியில்லை. உரையாடல்களில் உட்பட, ஆங்கிலச் சொற்களைக் குறைவாகப் பயன்படுத்தியிருக்கலாம். மற்றபடி சுகமான வாசிப்புக்கு ஏற்ற நல்ல நூல் இது. -சுப்ர.பாலன். நன்றி: கல்கி, 22/6/2014.