நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில்
நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில், கோபாலஸ்மி ரமேஷ், சேவாலயா கசுவா கிராமம், திருநின்றவூர் அருகில், திருவள்ளூர் மாவட்டம் 602024, விலை நன்கொடை மட்டுமே.
பொதுவாக எல்லா பள்ளிகளுமே தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இன்றைய நிலையில் சேவாலயா தொண்டு நிறுவனம், கல்வியுடன் மாணவர்களக்கு இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், பொதுநலன் சார்ந்த நற்பண்புகளைப் போதித்தும் நீதிபோதனை (Moral Science) வகுப்புகளையும் பிரத்யேகமாக நடத்துகிறது. குறிப்பாக, மகாகவி பாரதி, மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற மகான்கள் கூறிய நெறிமுறைகளைத் தொகுத்துப் பாடமாக்கி, அவை நீதிபோதனை வகுப்புகளில் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. பிஞ்சு உள்ளங்களில் நல்ல விதைகளை விதைப்பதால், அவர்கள் படித்து, ஆளாகி, தொழில் செய்து, பணம் ஈட்டி வாழும்போது, அது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல பலனைத் தரக்கூடும். கல்வி எவ்வளவு முக்கியமோ, நற்பண்புகளும் அவ்வளவு முக்கியம். எல்லா பள்ளிகளிலும் இதுபோன்ற நீதிபோதனை வகுப்புகளையும் முன்புபோல் மீண்டும் உருவாக்கி நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இங்கு போதிக்கப்படும் இப்பாடத் திட்டங்களைத் தொகுத்து, புத்தகமாக வெளியிட்டுள்ளனர். வியாபார நோக்கம் இல்லாததால், இப்புத்தகத்தை இலவசமாக வழங்குகிறார்கள். தவிர, வலைதளத்திலிருந்தும் யார் வேண்டுமானாலும் இலவசமாக இதைப் பதிவிறக்கமும் செய்து கொள்ள அனுமதித்துள்ளார்கள். நல்ல முயற்சி. -பரக்கத். நன்றி: துக்ளக், 19/2/2014.
—-
ஜீவ அமிர்தம், கோ. திருமுருகன் என்ற பூரணானந்தன், வைதேகி பதிப்பகம், விலை 200ரூ.
புதியவர்களையும் ஆன்மிகக் கருத்தை ஆர்வமாக வாசிக்க வைக்கிறது இந்த நூல். குறிப்பாக, அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை எப்படி வைத்துக்கொண்டால் நல்லது என்பதை மகான்கள் மற்றும் சித்தர்களின் சித்தாந்த பாடல்கள் மூலம் எழுத்தாளர் விவரிக்கிறார். சிவவாக்கியர், திருமூலர், பட்டினத்தார், திருவள்ளுவர், வள்ளலாரின் பாடல்களை ஆங்காங்கே தடித்த எழுத்துகளில் தந்துள்ளது இந்நூலை வாசிக்கச் சொல்கிறது. பல சித்தர்களின் படங்கள் வெளியிடப்படிருக்கிறது. -மீனாட்சி. நன்றி: தினமலர், 16/2/2014.