நினைவு அலைகள்
நினைவு அலைகள், கலாநிகேதன் பாலு, வசந்தா பிரசுரம், சென்னை, பக். 206, விலை 150ரூ.
கலைத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம் உள்ளவர் இந்நூலாசிரியர். இவர் 60களில் கலாநிகேதன் சபாவில் செயலாளர் பொறுப்பில் இருந்தபோது, அன்றைய பிரபலங்கள் பலருடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. அந்த அனுபவங்களை அமுதசுரபி உள்பட பல்வேறு பத்திரிகைகளிலும் எழுத, அது பிரபலமானது. இந்நூலில் அவையும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலின் முதல் கட்டுரையில் ஷெனாய் வாத்ய மேதை பிஸ்மில்லாகான் சென்னை வந்தபோது, அவரையும் அவரது இசைக்குழுவினரையும் திருமதி சுப்புலெட்சுமி கல்கி சதாசிவம் தங்கள் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு விருந்தளித்துக் கௌரவித்த விபரம் விளக்கப்பட்டுள்ளது. இன்னொரு கட்டுரையில் சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைக் கண்டு பாராட்டிய ராஜாஜி, திப்பு சுல்தான் வரலாற்றையும் நாடகமாக்கி, திப்பு சுல்தானாக சிவாஜி நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள சிவாஜி அதை ஏற்ற, அதற்கான முயற்சியில் இறங்கியும், அது நிறைவேறாமல் போன சம்பவம் கூறப்பட்டுள்ளது. இப்படி 32 கட்டுரைகளில் கலையுலகைப் பற்றிய செய்திகள், அனுபவங்கள் களஞ்சியமாக இந்நூல்ல் தொகுக்கப்பபட்டுள்ளன. அதே போல் இந்நூலாசிரியர் அம்புலிமாமா உள்பட பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய சிறுவர்களுக்கான 57 சிறுகதைகள், அன்பே வெல்லும் என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.இந்நூலும் இதே பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. கருடராஜா, அரக்கு மாளிகை, சோம்பேறிக் கழுதை, நட்பின் சிகரம், பேராசை… போன்ற கதைகள் சிறுவர்களை மிகவும் கவரக்கூடியவை மட்டுமல்ல, நற்குணம், நற்சிந்தனைகளை ஏற்படுத்தக் கூடியவை. -பரக்கத். நன்றி: துக்ளக், 10/6/2015.