நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்
நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், தனி நாயக அடிகள், தமிழில் க. பூரணச்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 204, விலை 150ரூ.
ஓர் இன மக்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் நிர்ணயிப்பதில் நிலவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த மண்ணில் தோன்றுகின்ற கவிதை உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் அந்த மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன. இதற்கு தமிழ் மண்ணும் தமிழ்க் கவிதைகளும் விதிவிலக்கல்ல. எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகியவை தமிழ் மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை மட்டுமின்றி, அன்றைய சுற்றுச்சுசூழல் மீதான தமிழர்களின் அக்கறை, சமூக, பொருளாதார, அரசியல், இலக்கிய நிலைமைகளையும் நேர்மையாகவும் சுவையாகவும் சொல்கின்றன. அத்தகைய செவ்வியல் தமிழ்க் கவிதைகளும் நில அமைப்பும் எவ்வாறு ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவையாக இருந்திருக்கின்றன என்பதை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து விளக்குகின்றன இந்தக் கட்டுரைகள். வாழ்க்கையும் இயற்கையும், ஐந்திணைப் பகுப்பு, ஒப்புநோக்கில் இயற்கைக் கவிதை உள்ளிட்ட 8 தலைப்புகளில் உள்ள இக்கட்டுரைகள் தமிழ்க் கவிதைகளில் உள்ள இயற்கை குறித்து, முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க உதவுகின்றன. மொழிபெயர்ப்பு நூல் என்ற எண்ணமே எழாமல் வாசிக்கத் தூண்டும் வகையில் உள்ளது சிறப்பு. நன்றி: தினமணி, 1/3/2015.