நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா
நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ.
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தவர் டி.எஸ். பாலையா. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்திறன் கொண்ட டி.எஸ். பாலையாவுக்கு இதுவரை ஒரு நிறைவான நூல் இல்லை. அந்தக் குறையை தீர்த்துவைத்திருக்கிறது இந்நூல். பாலையா நடித்திருக்கும் அனைத்துப் படங்களையும் கால வரிசைப்படுத்தித் தந்திருப்பது சினிமா ஆய்வாளர்களுக்கு உதவும் பணி. பாலையாவின் ஆரம்பகால படங்களின் பிரதி எதுவும் கிட்டாத நிலையில், தன் சினிமா இதழ்கள், இசைத்தட்டுக்கள் சேகரிப்பின் வாயிலாகத் தமிழ் சினிமா உலகிற்குத் தந்து பேருதவி புரிந்திருக்கிறார். இது ஒரு வகையில் தமிழ் சினிமா வரலாற்றை மீட்டெடுத்திருக்கும் பணி என்றே சொல்லலாம். அறிமுகமான சதிலீலாவதி முதல் எல்லைக்கோடு படம் வரை அவரைப் பற்றிய அரிய தகவல்கள், நடிப்பாற்றல், நாடகப்பணி, சக திரைப்படக் கலைஞர்கள், தயாரிப்பளர்கள், இயக்குநர்கள் என்று எதையும் விடாமல் ஒரு ஆவணமாக இந்நூலைப் பதிவாக்கியுள்ளதில் ஆசிரியரின் உழைப்பு தெரிகிறது. நன்றி: குமுதம், 2/2/2015.
—-
பகைவனும் நண்பனே, கோசலை நினைவு கல்வி அறக்கட்டளை, இயற்கை சக்தி பப்ளிகேஷன்ஸ், காஞ்சிபுரம் மாவட்டம், விலை 120ரூ.
தாய் தந்தையர் இல்லாதவன் மட்டும் அனாதை அல்ல. நல்ல நண்பன் இல்லாதவனும் அனாதைதான். நட்பின் பெருமையை அணுஅணுவாக ஆராய்ந்து அழகுபட எழுதியுள்ளார். சமூக நல ஆர்வலர் அகநம்பி. நன்றி: தினத்தந்தி, 4/2/2015.