நூற்றாண்டை கண்ட டி.எஸ். பாலையா
நூற்றாண்டை கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தான கிருஷ்ணன், நிழல் பதிப்பகம், பக். 140, விலை 150ரூ.
குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் எராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா. அந்த அபூர்வக் கலைஞனைப் பற்றிய அரிய ஆவணப் பதிவே இந்நூல். 1936இல் ‘சதிலீலாவதி’யில் அறிமுகமாகி 1972-இல் ‘எல்லைக்கோடு’ வரை சுமார் 145 திரைப்படங்களைத் தாண்டி பயணித்த டி.எஸ்.பாலையா பற்றி இந்தத் தலைமுறையினர் மட்டுமல்லாமல் அவருடைய சமகாலத்தவர்கள்கூட அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்களைத் தன்னுடைய கடும் முயற்சியில் சேகரித்து எளிய மொழிநடையில் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன். இத்தனை படங்களில் எந்தப் படத்தைப் பற்றிய தகவல் சிறந்தது எனக் குறிப்பிட நாம் முயன்றால் அது, குவளையில் வைக்கப்பட்டுள்ள தேனில் எந்தத் துளி சுவை மிகுந்தது என ஆராய்வதற்கு ஒப்பாகும். அந்த அளவுக்கு அத்தனை தகவல்களும் தித்திக்கின்றன. நன்றி: தினமணி, 16/3/2015.