பட்டினத்தார் பாடல்கள்
பட்டினத்தார் பாடல்கள், புதுக்கவிதை வடிவில், கிருஷ்ண பிரசார், காவ்யா, பக். 1354, விலை 1300ரூ.
சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையாக இடம்பெற்றள்ள பட்டினத்தார் பாடல்களும், பட்டினத்தாரின் ஏனைய பாடல்களின் தொகுப்பில் உள்ள பாடல்களும், புதுக்கவிதை வடிவில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்ட பட்டினத்தார், தம் பாடலுள் கூறும் அரிய சைவ சித்தாந்த கருத்துகளை, எளிய, இனிய கவிதை வடிவில் இந்நூல் தந்துள்ளது. சித்ததர் என்போர் யாவர், மூடநம்பிக்கைகளை வேரறுத்து, உருவ வழிபாட்டை எள்ளி நகையாடிய இவர்கள், பின் ஏன் பல தலங்களின் இறைவனை முன்நிறுத்தி பாடல் புனைந்துள்ளனர். புராண நிகழ்வுகளையும், நாயன்மார் கதைகளையும் குறிப்பிட்டுள்ளனர் என்பதற்கு இந்நூல் கூறும் விளக்கம் சிந்தனைக்கோர் விருந்து. மொத்தத்தில் இரும்பாக இருந்த சித்தாந்தத்தை கரும்பாக்கி தந்தவர் பட்டினத்தார். அதைச் சாறு பிழிந்து, கவியரசமாக தந்துள்ளது இந்நூல். -புலவர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 21/9/2014.
—-
அலகிலா விளையாட்டுடையான், எஸ். கணேச சர்மா, கிரி டிரேடிங் ஏஜென்சி, சென்னை, பக். 272, விலை 150ரூ.
இந்த நூற்றாண்டின் நடமாடும் தெய்வமாக உலா வந்த உத்தமர் மகா பெரியவர், காஞ்சி ஸ்ரீ காமகோடி ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பது, இந்த வையகம் நன்கறியும். இந்த மகா அவதாரத்தை பக்தி செய்து வழிபட்ட பாக்கியசாலிகள் பலர். வேண்டுவோருக்கு வேண்டுவதை எல்லாம் நெறி பிறழாது வாரி வழங்கிய ஞானக்கடல். கசிந்து கண்ணீர் மல்க வேண்டினால் நோய்களை நொடிப்பொழுதில் தீர்த்து வைத்த அருட்செல்வர். எண்ணியதை எண்ணயிவாறு, எமக்கருளும் கண்கண்ட தெய்வம் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். படிக்கப் படிக்க ஒரு நாவலைப் படிப்பது போன்று உள்ளது. 55 பக்தர்களின் வாழ்வில், மகா பெரியவர் அவர்கள் விளையாட்டாக ஆற்றிய அனுக்கிரகங்களை பதிந்துள்ள பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. -குமரய்யா. நன்றி: தினமலர், 21/9/2014.