பட்டு
பட்டு, அலெசாண்ட்ரோ பாரிக்கோ, தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில், பக். 120, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-5.html
சொல்லாத சொற்களுக்குப் பொருள் அதிகம் என்பதைப் படித்து முடித்ததும் உணரச்செய்கிறது பட்டு மொழிபெயர்ப்பு நாவல். துண்டு துண்டாகத் தாவிச் செல்லும் மொழிபெயர்ப்பு. இறுதியில் கோவையாக நமக்கு ஒரு சித்திரத்தை வழங்குகிறது. 19ம் நூற்றாண்டில் ஒரு பட்டு வியாபாரியின் கடல் கடந்த காதலை மென்மையாக நமக்கு விவரிக்கிறது. பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் பணிபுரிந்த பிறகு பட்டுப் புழு வியாபாரம் செய்ய ஜப்பானுக்குச் செல்கிறான் ஹெர்வே ஜான்கர். அங்கே பட்டுப் புழு வியாபரிகள் புடைசூழ ஒரு மர்ம அழகியைச் சந்திக்கிறான். அவளிடம் பேசவில்லை. மெய் தீண்டவில்லை. ஆனால் ஏதோ ஓர் ஈர்ப்பு. அது மறுபடியும் மறுபடியும் அவனைக் கடல் தாண்டவைக்கிறது. ஜான்கர் வசிக்கும் லாவில்லேடியூ நகரத்தில் பட்டுப் புழுக்களை நோய் தாக்கியபோது, தரமான பட்டுப் புழுக்களை வாங்க ஊரே ஒன்று சேர்ந்து அவனை ஜப்பானுக்கு அனுப்பிவைக்கிறது. அப்படிச் செல்லும்போதுதான் அவன் அந்த மர்மப் பெண்ணை மீண்டும் சந்திக்கிறான். ஜப்பானியச் சித்திர எழுத்துக்களில் அவள் எழுதிய ஒரு கடிதம் ஜான்கரை அலைக்கழிக்கிறது. போர்க்காலத்தில் ஜப்பான் பற்றி எரியும்போது போக வேண்டாம் என ஊர்க்காரர்கள் சொல்கின்றனர். அதை மறுத்து ஜான்கர், ஜப்பானுக்குச் செல்கிறான். அங்க ஜப்பான் எரிந்து கொண்டு இருக்கிறது. அவன் ரஷ்யாவையும், சைபீரியாவையும் கடந்து பிரான்ஸூக்கு வருகிறான். ஆனாலும், இனிய கனவாக அவள் நினைவு அவனை ஆட்டுவிக்கிறது. திடீரென ஒருநாள் சித்திர எழுத்துக்களில் கடிதம் ஒன்று வருகிறது. அதைப் படிக்க, பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருத்தியை நாடுகிறான். அவள் கடிதத்தை வாசிக்கிறாள். அது காமமும் காதலும் சொட்டும் கடிதம். வாசித்து முடித்ததும் எதுவும் பேசாமல் எழுந்து செல்கிறான். பிறகு ஒரு நாளில் ஜான்கரின் மனைவி ஹெலன் இறந்துபோகிறாள். ஏதோ ஓர் உள்ளுணர்வு ஜான்கரைத் தூண்டுறிது. அந்தக் கடிதத்தை எழுதியது யார் என்ற சந்தேகம் வருகிறது. அதற்கான விடை தேடும்போது அது முழுமையடையாத கனவின் நிறைவுக் காட்சியைப்போல விரிகிறது. அதுவரை மனம் உணர்ந்து கொண்ட கதைகளுக்கு புதிய பரிமாணம் கிடைக்கிறது. மனம் கைவிட விரும்பாத, இரண்டாம் நபரிடம் விவரித்து சொல்ல முடியாத ஒரு காதல். அது நிகழும் மர்மம் நிறைந்த சரித்திரப் பின்னணி என பட்டு நாவலின் கதைக்களம் பூடகமான வரலாற்றுடன் நகர்கிறது. அலெசான்ட்ரோ பாரிக்கோ இத்தாலிய மொழியில் எழுதிய செட்டா(seta) என்னும் இந்த நாவல் உலகின் 30க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.தமிழில் சுகுமாரன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: விகடன்
