பணம் விரும்புதே உன்னை
பணம் விரும்புதே உன்னை, டி.ஏ. விஜய், புதிய பறவை பதிப்பகம், பக். 204, விலை 555ரூ.
தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்து, பின் புத்தக வடிவில் வெளியாகி, பலரது பாராட்டுதல்களை பெற்ற புத்தகம். தற்போது 11வது பதிப்பாக வெளிவந்துள்ளது. பங்கு வர்த்தம் என்றாலே, வேப்பங்காயாக கசக்கும். அதில் புழங்கும் நடைமுறைகள், சொற்கள் ஆகியவை எட்ட இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக இருக்கும். மொத்தத்தில், பலாப்பழ மேல்தோல்போல், பார்வைக்கு கடினமாக காணப்படும் பங்கு வர்த்தகத்தில் பக்குவமாக நுழைந்தால், பணம் என்னும் தேன் சுவை கொண்ட பழத்தை ருசிக்கலாம் என்கிறார் ஆசிரியர். புத்தகம் நெடுக, எளிய நடையில் பங்கு வர்த்தகத்தின் நெளிவு, சுளிவுகளை விவரித்து, ஆங்காங்கே எச்சரிக்கையும் விடுத்து, பணம் பண்ணும் வித்தையை, சாதாரணமானவர்களுக்கும் புரியுமாறு விவரித்திருக்கிறார். பங்குச் சந்தையில் புழங்கும், காளை, கரடி என்ற சொற்களுக்கு எம்.ஜி.ஆர், நம்பியாரை, உவமையாக்கியிருப்பது, அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட முதலீடுகள் குறித்து, இளைஞர்களுக்கு வழிகாட்டும் இந்த புத்தகத்தில் பங்குகளின் தற்போதைய விலை விவரங்களை மேம்படுத்தியிருக்கலாம். -விஜய்தேவ். நன்றி: தினமலர், 13/7/2014.
—-
பெண்ணிய நோக்கில் கம்பர், முனைவர் எம்.எஸ். ஸ்ரீலட்சுமி, உமா பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 100ரூ.
முனைவர் எம்.எஸ். ஸ்ரீலட்சுமி, செட்டிநாட்டு மண்ணில் பிறந்து, சிங்கப்பூர் சீமையில் செந்தமிழ் வளர்ப்பவர். அவரது இந்த நூல் கம்பனின் பெண் கதை மாந்தர்களை, பெண்ணிய நோக்கில், புதிய கோணத்தில் கூராய்வு செய்கிறது. ராமபிரானை பார்த்த மாத்திரத்தில் ஒரு பெண், தன் உயிரை தவிர அத்தனையும் இழந்தாள் என்று கம்பன் பாடியிருப்பது, பெண்ணிய நோக்கில் விவாதிக்க இடம் தருவது என்கிறார் நூலாசிரியர். கம்பர் மகளிர் பற்றி பாடியுள்ள செய்திகள், ஆணாதிக்க சமுதாயத்தின் குரலாகவும், அதன் வெளிப்பாடாகவும் அமைகிறது. கம்பர் கால சமூக கட்டமைப்பில், பெண்களின் நிலை பற்றி அறிய ராமகாதை உதவுகிறது என்பது நூலாசிரியர் கருத்து. கம்பர் பெண்கள் பால் பரிவும், மதிப்பும் கொண்டவர் என்பதை இந்த ஆய்வு நூல் உணர்த்துகிறது. -ஜி.வி.ஆர். நன்றி: தினமலர், 13/7/2014.