பத்துப்பாட்டு ஆராய்ச்சி

பத்துப்பாட்டு ஆராய்ச்சி, மா. இராசமானிக்கனார், சாகித்ய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 688, விலை 365ரூ.

சங்கத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை பத்துப்பாட்டு நூல்கள், ஆற்றுப்படை இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சி ஐவகை நிலங்கள், நாடுகள், அரசர்கள், பாட்டுடைத் தலைவர்கள், பாணர், விரலி போன்ற இசைவாணர்கள், ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தொழில், வாணிகம், உணவு, பழக்கவழக்கங்கள், விளையாட்டுகள், சமயம், அழகுக்கலைகள், மரம், செடி, கொடி, விலங்குகள் முதலியவை பற்றிய ஆழமான ஆய்வாக மலர்ந்திருக்கிறது. மிகவும் நுட்பமான ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி என்றால் பேரறிஞர் வையாபுரிப்பிள்ளைக்கு அடுத்து, பேரறிஞரான டாக்டர் இராசமாணிக்கனாருடையதாகத்தான் இருக்கும். எழுத்தெண்ணி ஆராய்ந்திருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்திருக்கிறார். உண்மையான ஆராய்ச்சியாளனுக்கு நடுநிலைமையே உயிர். அவ்வுண்மைக்கு உரைகல்லையும் இந்நூல் விளங்குகிறது என்று துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு வழங்கியுள்ள அணிந்துரை (9/7/1970) ஆய்வுக்கும் ஆய்வாளருக்கும் அணிக்கு அணிசேர்த்திருக்கிறது. பத்துப்பாட்டு தொடர்பான பல சந்தேகங்களுக்கும் சிக்கல்களுக்கும் இதில் தீர்வு உள்ளது. குறிப்பாக பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள அரிய சொற்களும் பிறமொழிச் சொற்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தமிழ் இலக்கியச் சொல்லாராய்ச்சிக்கும் பெரிதும் உதவும். இந்நூல் யார் யாரிடமெல்லாம் அவசியம் இருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. நன்றி: தினரன், 5/8/13.  

—-

 

பிரபுலிங்கலீலை-மூலமும் உரையும், அடிகளாசிரியர், மயிலம், பொம்மபுர ஆதினம், மயிலம், பக். 900, விலை 600ரூ.

துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் சைவ மறையின் ஆணிவேர். அதனால் இந்த நூலை காவிய ரத்னம் என்று தமிழ் அறிஞர்கள் போற்றுவர். இது வீரசைவ நூல், வாழவின் மயக்கத்தை அறுத்து, சிவன் பக்கம் சார்ந்து, தெளிபட வழிகாட்டும் கருவை மையமாகக் கொண்டது. மயிலம் பொம்மபுர ஆதீனம் இந்த நூலை உரையுடன் வெளியிட்டு சைவ நெறிக்கு பெருமை சேர்த்துள்ளது. நிறைத் அறிஞர்கள், ஞானி யார் என்பதை ஆராய்வது வழக்கம். அதற்கு எளிய விடையாக 865வது பாடலில், கரும்பைக் கண்டால் யானை அதன் முற்பகுதி இலையை நீக்கி, முழுமையாகச் சுவைக்கும். ஆடு அதைக் கண்டால், மாறாக இலையைத் தின்னும், கரும்பைச் சுவைக்காது என்ற கருத்து, ஓர் உதாரணம். அதை செறிந்த ஆடிலை தின்பன் என்னவே என்று நான்கு சீர்கள் விளக்கும். ஆழ்ந்த அறிவைப் போதிக்கும் சைவ இலக்கியம் மீண்டும் தமிழ் உலகில் வலம் வர, இந்த வெளியீடு உதவிடும். நன்றி: தினமலர், 4/8/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *