பழவேற்காடு முதல் நீரோடி வரை

பழவேற்காடு முதல் நீரோடி வரை, வறீதையா கான்ஸ்தந்தின், எதிர் வெளியீடு, விலை 130ரூ.

என் விடலைப் பருவம் மீனவக் கிராமத்தின் வாசனை அடுக்குகளாக மனதில் பதிந்துகிடக்கிறது. மறக்க இயாத அருமையான வாழ்க்கை அது. காலண்டரில் தமிழ்/ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்துவதுபோல என் கடற்கரை வாழக்கையில் வருடத்தை மீன்வரவுகளின் பருவங்களாக வரிசைப்படுத்திவிட முடியும். சாளை, சாவாளை, குதிப்பு, சள்ளை மீன், அயிலை, நெத்திலி, கூனி, இறால், மரத்துமீன், கணவாய், கெழுது, கிளார்த்தி என்று எளிதாய்ப் பட்டியல்படுத்தலாம். ஒவ்வொரு மீனின் வருகையின்போதும் கடலோரம் புதுப்புது வாசனைகளை அணிந்துகொள்ளும். இதையெல்லாம் நீங்கள் கவிச்சி என்னும் ஒற்றைச் சொல்லால் எளிமைப்படுத்திவிடக்கூடும்… என்று கடல் மகனாய் பிறந்த வறீதையா எழுதிய மீன் மணக்கும் புத்தகம் இது. மீனவர்களின் ரத்தமும் சதையுமான பிரச்னைகளை அதற்கான உண்மைத்தன்மையுடன் பேசுகிறார் வறுதையா. கடல் சூழ்ந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அது இயற்கையின் கொடை. அந்த கொடையால் அடைந்த துன்பங்களும் அதிகம். அதன் உச்சம்தான் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி. அதிகபட்சமாக 6 ஆயிரம் மனித உயிர்களை நாகப்பட்டினத்தில் இழந்தோம். கன்னியாகுமரியில் 824 உயிர்களும் கடலூரில் 615 உயிர்களும் இழக்கப்பட்டன. இவ்வளவு பெரிய மனித அவலம் நடந்த பூமியில் நிவாரணப் பணிகள் எந்த அளவுக்கு நடந்திருக்க வேண்டும்? மீனவர்களின் வாழ்வாதாரத்தை வளர்த்தெடுக்க அனைத்துத் தரப்பும் முனைந்திருக்க வேண்டும். எதுவும் நடக்கவில்லை என்பதை தன்னுடைய களஆய்வுகளின் மூலமாக வறீதையா நிரூபிக்கிறார். சுனாமிக்குப் பிறகான 10 ஆண்டு காலத்தில் தமிழகக் கடற்கரை எந்த மாதிரி ஆகியிருக்கிறது என்பதை நேரடியாகப் போய் பார்க்கிறார். தொண்டு நிறுவனங்கள் பணம் வசூலிக்க ஒரு வழியாக இந்தச் சுனாமியைப் பயன்படுத்திக்கொள்கின்றன. சுனாமி பாதித்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை பின்னர் அந்த சுனாமி பாதித்த மாவட்டங்களுக்கு என மாற்றி, அதன்பிறகு பாதிப்புக்குள்ளான தமிழக மக்களுக்கு என விரிவுபடுத்தி… உண்மையாக அந்த மக்களுக்கு எதையும் கிடைக்கவிடாமல் செய்த துர்பாக்கியத்தை அம்பலப்படுத்துகிறார். இடிந்தகரை முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரை நடந்த, நடக்கும் போராட்டங்களின் நேரடி சாட்சிகள் இதில் பேசுகிறார்கள். மீனவர்களுக்காக பேசுவதாக நடிக்கும் அரசியல், மத நிறுவனங்களை கடுமையாகக் கண்டிக்கிறார். மத நிறுவனத்தில் உள்ளே இருந்துகொண்டு தங்கள் உரிமைகளை மீட்டுக்கொள்ளப் போராடுவது விளிம்பு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் குடிமை வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க மதத்தையும் சாதியையும் கடந்து செல்வதே நீடித்த தீர்வாகப்படுகிறது. இது மீனவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா விளிம்பு மக்களுக்கும் பொருந்தும் என்கிறார் வறீதையா. இந்த சொற்களில் கவிச்ச அல்ல, உண்மை மணக்கிறது. நன்றி: ஜுனியர் விகடன், 27/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *