பாரதிதாசன் கட்டுரைகள்
பாரதிதாசன் கட்டுரைகள், மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, சென்னை 17, பக். 288, விலை 90ரூ.
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு கிடைத்த பெருமை, அவரது நாடகம், புதினம், சிறுகதைகளுக்கும் விரிந்தன. ஆனால், கவிஞராய் அறிமுகம் ஆன பாரதியார், பாரதிதாசன் கதைகள், கட்டுரைகள் உரிய இடத்தைப் பெறவில்லை. பாரதிதாசன் சிறந்த கதாசிரியர், நாடக ஆசிரியர், இதழ் ஆசிரியர். அவரது பன்முகத்திறன்கள் இன்னமும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்கிறது, பாரதிதாசனின் 53 கட்டுரைகள் அடங்கிய இந்த அற்புத நூல். மொழி, நாடு, சமயம், வாழ்வியல், பல்சுவை, சமுதாயம் என்ற ஆறு தலைப்புகளில், கட்டுரைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடவுள் மனிதரின் சிருஷ்டியா? மனிதர் கடவுளின் சிருஷ்டியா? என்ற இரண்டில் ஒன்றை நான் நிச்சயித்துவிட உத்தேசம் (பக். 96). ஊழ் என்ற சொல்லுக்கு விதி என்பது பொருள் அல்ல, கடைசி என்பதே சரியான பொருள் (பக். 129). கோயில் என்றால் அரசியல் (பக். 150), தங்கம் என்றால் தங்குதல் (பக். 182). பாவேந்தரின் பரந்த சிந்தனைகளைப் பறைசாற்றும், சிறந்த கட்டுரைத் தொகுப்பு. -முனைவர் மா.கி. ரமணன்.
—-
மனித குல வரலாறு, எஸ். சங்கரன், அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக். 224, விலை 85ரூ.
ஆரம்பத்தில் எகிப்திய நாகரிகம் பற்றிச் சொல்கிறார். பின் பாபிலோனியர்கள், கிரேக்கர்கள், பாரசீக நாகரிகம், ரோமானியர்கள், சித்தியர்கள், சிந்துவெளி நாகரிகம், சீனாவின் பெருமை. அரேபியப் பேரரசு, ஆசிய நாடுகள், இங்கிலாந்தின் வளர்ச்சி, காலனி நாடுகள், ரஷ்யப் புரட்சி, முதல் உலகப் போர் என்று மனிதகுல வரலாற்றை ஒரு பறவைப் பார்வையில் சொல்லிச் செல்கிறார். பொது அறிவு வளர அவசியம் படிக்க வேண்டிய நூல். -எஸ். குரு. நன்றி: தினமலர், 9/2/2014.