பாரதியார் ஆய்வுக்கோவை
பாரதியார் ஆய்வுக்கோவை, கங்கை புத்தகநிலையம், சென்னை, விலை 250ரூ.
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் என்ற கொள்கையோடு உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞர் மகாகவி பாரதியார். அவரது 125வது பிறந்த நாள் விழாவையொட்டிச் சிறப்பு வெளியீடாக வந்தது இந்த நூல். இதில் 80 அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. பாரதியாருடைய படைப்புகளைப்பற்றி மதிப்பீடாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவரது கவித்திறம், உரைத்திறம், உவமைநலம், கற்பனை வளம், அணிநயம், பாரதியாரின் வரலாறு, வாழ்வியல் அனுபவங்கள், அவரது அரசியல், ஆன்மிக, இலக்கிய, பொருளாதார, சமுதாயச் சிந்தனைகள், உலகப் பெரும் கவிஞர்களுடன் ஒப்பியல் நோக்கில் பாரதியார் போன்ற பல்வேறு தலைப்புகளிலும் கட்டுரைகள் அடங்கியுள்ளன. காலந்தோறும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருத்துக்களஞ்சியமாக இந்நூலை தொகுத்துள்ளார் கலைமாமணி பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர். நன்றி: தினத்தந்தி, 7/1/2015.
—-
கவிகா.மு.ஷெரீப் கவிதைகள், கலாம் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
கவிஞர், எழுத்தாளர், சினிமா பாடலாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், உரையாசிரியர், சீறாப்புராண விரிவுரையாளர் என்பன போன்ற பன்முக அடையாளம் கொண்டவர் கவி கா.மு. ஷெரீப். அவர் எழுதிய கவிதைகள், தமிழ்நாடு, பாரத நாடு, சமுதாயப் பார்வை, இயற்கை, வாய்மை நெறி, தத்துவச் சாரல் போன்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. தனக்காய் வாழாத் துறவி, ஆசை தன்னை நினையாப் பிறவி என்ற காமராஜரையும் வாழ்வு முற்றும் எதிர்ப்பினைடை வாழ்ந்த இமயக் குன்று என்று பெரியாரையும் போற்றும் கவிதைகள் நெஞ்சைத் தொடுகின்றன. கா.மு.ஷெரீப் நூற்றாண்டையொட்டி இந்த நூல் வருவது, அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மையைக் கடைப்பிடித்த அவருக்கு செலுத்துகிற நல்லெண்ணக் காணிக்கையாகும். நன்றி: தினத்தந்தி, 7/1/2015