பாரதியின் புதிய ஆத்திசூடி சுவை புதிது
பாரதியின் புதிய ஆத்திசூடி சுவை புதிது, து. இராசகோபால், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 288,விலை 140ரூ.
குழந்தைகளின் நாற்றங்கால் பருவம் ஆரம்பப் பள்ளிப் பருவம். இக்காலத்தில் அறவியல் கருத்தகளை எளிய பாடல்கள் மூலமாக நமது குழந்தைகளின் மனதில் விதைக்கும் அற்புதமான கல்விமுறை நம்மிடம் இருந்தது. ஒற்றை வரியிலான உபதேச மொழிகளாக அமைந்த நீதி நூல்கள் குந்தைகளின் மனப்பயிற்சிக்கும் வாக்குப் பயிற்சிக்கும் மிகவும் உதவின. அதில் ஒன்றுதான் ஔவையார் எழுதிய ஆத்திசூடி. மகாகவி பாரதி இத்தகைய நிதிநூல்களின் முக்கியத்துவத்தை மிகவும் உணர்ந்திருந்தார். அதனால்தான் புதிய ஆத்திசூடியை அவர் படைத்தார். பாரதியின் புதிய ஆத்திசூடிக்கு புதிய விளக்கம் அளிக்கிறது இந்நூல். அதில் உள்ள 110 வரிகளுக்கும் தனித்தனி அத்தியாயங்களில், குறைந்த சொற்களில் விளக்கம், கருத்துரையுடன், அந்த வரி தொடர்பான பாரதியின் இதர பாடல் வரிகளையும் அடிக்குறிப்புகளுடன் அளித்துள்ளது நூலின் சிறப்பு. இவை தவிர, பாரதி வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள், பாரதியின் கட்டுரைகள், பாரதி குறித்த பிறரது நூல்களிலிருந்தும் பொருத்தமான மேற்கோள்கள் என நூல் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் மகாகவி பாரதி குறித்த அறிஞர் பெருமக்களின் புகழுரைகள் தரப்பட்டுள்ளன. சுத்தானந்த பாரதி, ராஜாஜி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை, பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வலம்புரிஜான், சுரதா, மீரா, வைரமுத்து, வாலி உள்ளிட்ட தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பாரதிக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே இப்பகுதி தோற்றம் அளிக்கிறது. மாணவர்கள் படிக்க வேண்டிய அரிய கருவூலம் இந்நூல் எனில் மிகையாகாது. நன்றி:தினமணி, 27/1/2014.
—-
கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8, ஜெ. வீரநாதன், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, போலீஸ் கந்தசாமி வீதி, ஓலம்பஸ், இராமநாதபுரம், கோயம்புத்தூர் 641045, விலை 190ரூ.
டி.டி.பி. துறைக்கு பயன்படும் மிக முக்கிய சாப்ட்வேர் போட்டோஷாப் ஆகும். இதற்கு மாற்றாக வந்துள்ள இலவச மென்பொருள் தான் ஜிம்ப் ஆகும். போட்டோஷாப் மூலம் செய்யப்படும் பெரும்பாலான வேலைகளை இதனை பயன்படுத்தி செய்ய முடிகிறது. ஆசிரியர் நூலில் ஒவ்வொரு டூலாக, ஒவ்வொரு மெனுவாக இதில் உள்ள பயன்பாடுகளை படங்களுடன் அனைவரும் புரியும்படி விளக்கியுள்ளார். ஏற்கனவே போட்டோஷாப் பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக இரண்டு மென்பொருளையும் ஒப்பிட்டு விளக்கியுள்ளது சிறப்பம்சமாகும். ஜிம்ப் மென்பொருள் மற்றும் செய்முறை வீடியோ அடங்கிய சி.டி.யுடன் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 12/2/2014.