பிள்ளையார் அரசியல்(மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள்)
பிள்ளையார் அரசியல், மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள், ஆ. சிவசுப்ரமணியன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 204, விலை 140ரூ.
மத அடிப்படைவாதிகளின் மனசாட்சியை உலுக்கும் கட்டுரைகள் வரலாறு என்பது அதிகார வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எழுதிக் கொண்ட புனைவுகள் என்பார் எழுத்தாளர் சாருநிவேதிதா. காலம்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறே, முழுமை பெற்ற வரலாறாக நம் முன் வைக்கப்பட்டது. அதையும் நம்பிக்கொண்டிருந்தோம். கடந்த 1990களின் துவக்கத்தில் ஆய்வுலகில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டது. அது விளிம்பிலிருந்து மைய வரலாறை அணுகியது. அன்றிலிருந்துதான் வரலாற்றில் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டி எடுக்கும் பணிகள் துவங்கின. அது போன்ற பணியை செய்வதில் முக்கிய இடத்தை வகித்தவர் ஆ. சிவசுப்பிரமணியன். ஆய்வாளர். மேல் தலையெழுத்து, மத சகிப்புத்தன்மையை உடைக்கும் இன்றைய கால கட்டத்தில், மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அவரின் சமீபத்திய ஆய்வுத் தொகுப்பு பிள்ளையார் அரசியல். ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் ஒளிந்திருப்பதை அவரது கட்டுரைகள், சமூகத்தின் முன், போட்டு உடைக்கின்றன. அவற்றில் முக்கியமானது, பூசாரிகளுக்கு வலை விரிக்கும் இந்துத்துவ அரசியல். தனித்தனி பண்பாட்டு வழிபாடுகள் கொண்ட, கிராம தேவதை கோவில்களை, மைய நீரோட்டத்துக்கு கொண்டு வருவதன் மூலம் பண்பாட்டு வன்முறையை, இந்துத்துவ இயக்கங்கள் செய்வதை சுட்டிக்காட்டுகிறார். அதேபோல் மற்ற தெய்வங்களை காட்டிலும் பிள்ளையார் இந்துத்துவ அரசியலுக்காக எப்படி பயன்படுத்தப்படுகிறார் என்பதையும் குறிப்பிடுகிறார். தமிழகத்தில், ஒரு சில தலித் இயக்கங்கள், மதமாற்றத்துக்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றன என்று, பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும் நிலையில், தென் மாவட்டங்களில் தலித் இயக்கங்கள் காலூன்றிய பிறகுதான், மதமாற்றம் பெரிய அளவில் குறைந்துள்ளது என்பதையும், கள ஆய்வுகளின் வழி விளக்குகிறார். பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை மற்ற மத நிறுவனங்கள் அபகரித்து, தங்கள் தளங்களை நிறுவியதை பல்வேறு ஆவணங்கள் மூலமாக விளக்குகிறார். இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள், மாற்று மதத்தினர் வணங்கும் இடங்களாக இருந்ததை வெளிக்கொண்டுவரும் ஆசிரியர் அதற்கு தீர்வு ஒன்றையும் முன் வைக்கிறார். வேடசந்தூர் அருகில் உள்ள, சின்ன முத்தன்பட்டி கிராமத்தில் உள்ள அந்தோணியார் கோவிலையும், அதற்கு அருகில் உள்ள மாலா என்ற இந்து கிராம தேவதை கோயிலையும் எடுத்துக்காட்டி, இரண்டு மதத்தினரும் சேர்ந்து அங்கு திருவிழா நடத்துவதை பதிவு செய்கிறார். அந்த இடத்தில், ஆய்வாளர் என்பதை தாண்டி, சமூகத்தை வழிநடத்தும் இடத்துக்குச் செல்கிறார். சமபந்தி ஓர் எதிர்ப் பண்பாடு, ஓர் அர்த்தமுள்ள குடிமக்களுக்கு சில அர்த்தமுள்ள கேள்விகள், எந்தப் பாதை, சாதிய முரண்பாடுகளும், மதமாற்றமும், தர்காக்களும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையும் போன்ற கட்டுரைகளை வாசிக்கும்போதே, வாசகனிடம் குற்ற உணர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இவை, நம் அடுத்த தலைமுறைக்கு கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை. இதன் மூலம் காலம் காலமாக நம் மனதில் இருககும் வன்மம் நீர்த்துப் போவதற்கு துணைபுரியும். முன் வைக்கும் கருத்துக்கு, அந்தந்த வார்த்தைகளுக்கு, அருகில் ஆவணங்களை வழங்குவதால், நம்பிக்கையுடன் அடுத்த வரிக்கு தாவ முடிகிறது. இதனால், கருத்து முரண்பாட்டில் தேங்கி நிற்கும் அவசியம் இல்லை. இருந்தாலும் ஒரு சில இடங்களில் முன் முடிவுகளோடு தான் ஆய்வை துவங்குகிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. மட்டுமின்றி, மற்ற மதங்களின் மேல் வைக்கும் குற்றச்சாட்டை விட, இந்து மதம் அதன் இயக்கங்கள் மேல் அதிகளவில் வைக்கிறார். சமூக பண்பாட்டு, மத ஆய்வுகளில் ஈடுபடுவோர், கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் இது முதன்மை பெறுகிறது. -அ.ப.இராசா. (கட்டுரையாளர்-பத்திரிகையாளர்-திரைப்பட பாடலாசிரியர்) நன்றி: தினமலர், 22/11/2015.