புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்
புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள், முல்லை மு. பழநியப்பன், முல்லை பதிப்பகம், பக். 128, விலை 50ரூ.
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம், சிறுகதைகளில் பெரும் புரட்சியும், புதுமையும் செய்தவல் இவர். புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் குறிப்பும், புதுமைப்பித்தன் கூறிய சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும், புதுமைப் பித்தனைப் பற்றி அறிஞர்களின் கருத்துரைகளும், இவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தான கருத்துரைகளும், கடிதங்கள், மதிப்புரைகள் ஆகியனவும் அடங்கியது இந்நூல். சிறிய நூல் என்னும் புதுமைப்பித்தனைப் பற்றித் தெரியாதவர்கள், தெரிந்து அறிந்துகொள்ள, நிரம்பச் செய்திகள் இதில் உள்ளன. அளவில் சிறிதாக இருந்தால் மட்டும், சிறுகதையாகிவிடாது. குறிப்பிட்ட ஒரு நிகழ்வை விவரிப்பதாக இருக்க வேண்டும். கவிதை, கருத்துப் பரப்புரையாக (பிரசாரமாக) இருந்தால், அது செத்துவிடும் போன்ற அருமையான வரிகளை நினைவூட்டும் நூல். பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அழகின் சிரிப்பு நூலுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரை படிக்க வேண்டிய ஒன்று. -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 20/4/2014.
—-
காப்பியங்களில் தொன்மம், முனைவர் வே. சேதுராமன், சேது பதிப்பகம், பக். 432, விலை 300ரூ.
நூலாசிரியர் முனைவர் பட்டம் பெறுவதற்கு, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு சமர்பித்து ஆய்வேடு, தற்போது நூலாக மலர்ந்துள்ளது. அரிது முயன்று நூற்றுக்கணக்கான நூல்களை ஆய்வு செய்து, இந்நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். இலக்கியமும், தொன்மும் (பக். 10), கலைத் தொன்மங்கள் (பக். 59), சமயத் தொன்மங்கள் (பக். 85), இயற்கைத் தொன்மங்கள் (பக். 171), சிறப்புத் தொன்மங்கள் (பக். 198) என, ஐம்பெருங் காப்பியங்களின் (கி.பி.2ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை) தலைப்பிட்டு, அற்புதமான ஆய்வு நூலைப் படைத்துள்ளார். ஆசிரியர் குறிப்பிடுவது போன்று, 50 ஆண்டுகள் அளவில், தமிழ் இலக்கிய உலகில் பேசப்பட்டு வருவதும், மேலை நாட்டின் உதவியால், தமிழில் வந்தேறிய தொன்மம் எவ்வாறு ஊடாடி உள்ளது என்பதை, மேற்கோள்களோடு விரித்துரைக்கும் செம்புலமை நம்மை வியக்க வைக்கிறது. பக். 228 முதல் பக். 432 வரை உள்ள நூலடைவும், தொன்மைப் பட்டியல் ஆசிரியரது உழைப்பையும், புலமையையும் வெளிக்காட்டுகிறது. ஆய்வு மாணவர்களுக்கு பெரிதும் பயன்தரவல்ல நூல். -குமரய்யா. நன்றி: தினமலர், 20/4/2014.