புறநானூறும் திருக்குறளும் ஒப்பாய்வு
புறநானூறும் திருக்குறளும் ஒப்பாய்வு, ஒளி பதிப்பகம், 4-63, டாக்டர் ரங்கா சாலை, சென்னை 18, விலை 150ரூ.
புறநானூறு, சங்க கால மன்னர்களின் வீரத்தை உணர்த்த வந்த நூல். திருக்குறள் மக்களுக்கு அறம் உணர்த்த வந்த நூல். இந்த இரு நூல்களின் அறிமுகம், தொடர், ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் புதிய கருத்துக்களை சிறப்புகளைப் பட்டியலிட்டு காட்டுகிறது இந்நூல். புறநானூற்றில் அமைந்துள்ள வரலாற்றுக் களஞ்சியங்கள், கவின் தொடர்கள், உள்ளம் கவர் அறக்கருத்துகள் ஆகியவை படிப்போரின் சிந்தனைக்கு விருந்தாகும் ஆய்வுப் பகுதிகளாகும். இரு நூல்களிலும் அமைந்துள்ள 50 கருத்து ஒப்புமைகளைத் தொகுத்து கூறியுள்ளது சிறப்புக்குரியது. காலத்தால் முந்தைய புறநானூற்றில் உள்ள பாடல் கருத்துகளையும், அதற்கு ஒத்த திருக்குறள் கருத்துகளையும் ஒப்பிட்டும், ஒற்றுமை வேற்றுமை கருத்துக்களை தொகுத்தும் கூறியுள்ளார் ஆசிரியர் சரளா இராசகோபாலன். இவர் திறனாய்வுக்காக கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 14/8/2013
—-
வாழ்வுக்கு வளம் தரும் மஹா யந்த்ரங்களின் மகிமை, எஸ். பாலசந்திர ராஜு, சிவரஞ்சனி பப்ளிகேஷன்ஸ், 16(12ஏ), சக்திநகர் 2வது தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 100ரூ.
ஆன்மீக உலகில் யந்த்ர வழிபாடு என்பது உருவ வழிபாட்டிற்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தை பெறுகிறது. அந்த வகையில் மேனாட்டு அறிவியல் விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டு யந்த்ரங்களின் மகிமையை பற்றி ஆசிரியர் தெளிவு பட விளக்கி காட்டுகிறார். இந்த யந்த்ரங்கள் பூஜையின் பலனாலும், மந்திரங்களின் உச்சரிப்பினாலும் உரியவருக்கு உரிய பலனை தரும் என்பதை பற்றியும் அந்த பலன் கிடைக்காததற்கு காரணங்கள் என்ன? என்பதை பற்றியும் கூறுகிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 14/8/2013
—-
புதுநோக்கில் பழம்பாக்கள், அருண்அகில் பதிப்பகம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ.
சங்க இலக்கியங்கள் குறித்த 12கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முல்லை நிலத்தின் சிறப்பு புதிய கோணத்தில் கூறப்பட்டுள்ளது சிறப்பு. மள்ளர், மறவர், மல்லர் சொற்களை ஒப்பீடு செய்து ஆராய்ந்து அளித்துள்ளார் நூலாசிரியர் வாணி அறிவாளன். நன்றி: தினத்தந்தி, 14/8/2013