புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா

புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா, மைக்கேல் ஸ்டென்சன், தமிழில்-எஸ். கண்ணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 270ரூ.

புலம்பெயர்ந்து செல்வது தமிழனுக்குப் புதிதல்ல. 18ம் நூற்றாண்டில் நீக்ரோ அடிமைகள் கப்பலில் ஏற்றப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப் போல இலங்கை, மலேசியா போன்ற நாடுகளின் தோட்டங்களில் வேலை பார்க்க தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார். எங்கேயாவது போய் பிழைத்துக்கொள் என்று இங்குள்ள பஞ்சமும் பட்டினிச் சாவு, சாதிக் கொடுமையும் அவர்களை விரட்டியது. ஒப்பந்தக் கூலிகள் என்று ஏதோ அதிகாரப்பூர்வமானவர்களாக இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டாலும், கொத்தடிமைகளை விடக் கேவலமாகவே நடத்தப்பட்டார்கள். இப்படி மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும், அதிலிருந்து உரிமைபெற கொந்தளிப்புடன் நடத்திய போராட்டங்களும் பற்றிய வரலாறுதான் இந்தப் புத்தகம். மார்க்சிய அடிப்படைக் கொள்கை மொழிபெயர்ப்புகளைச் செய்த வேட்டை எஸ். கண்ணனின் செறிவான மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. தென் இந்தியாவில் இருந்த பிரிட்டன் ஆட்சி, அங்கு வாழ்ந்த மக்கள் அனுபவித்த கொடிய வறுமை, அடிமை வாழ்வு ஆகிய மூன்றும்தான் இவர்களைப் புலம்பெயர்ந்து வாழ விரட்டியது. இதேபோல் சீனா, இந்தோனேசியா ஆகிய நாட்டு தொழிலாளிகளும் மலேசியாவில் குவிக்கப்பட்டனர். பல்வேறு இனங்கள் ஒரு இடத்தில் குவியும்போது ஏற்படும் கொந்தளிப்பை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய தனித்தனியா மூன்று ஆசிய தேசிய இனவாதங்களின் செல்வாக்கு அங்கு ஏற்பட்டன. எந்த ரப்பர் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்களோ அந்தத் தொழிலில் தேக்கம் ஏற்படும்போது தொழிலாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தக் கோரிக்கையை சீனர்களும் இந்தியர்களும் ஏற்க மறுத்தார்கள். அதுவரை அமைதியான நாடாக இருந்த மலேசியா கொந்தளிப்பைச் சந்தித்தாக வேண்டிய நெருக்கடி… இத்தகைய சூழ்நிலையில்தான் மலேசிய இந்திய மத்தியக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இந்தியத் தொழிலாளர்களின் தகுதியை உயர்த்துவதே ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் தகுதியை உயர்த்துவதற்கான திறவுகோல் என்று மலேசிய அரசாங்கத்துடன் இந்த அமைப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. இந்தியத் தொழிலாளர்கள் ஒன்று திரட்டப்படுவது, இது தேசியவாதமாகவும் வகுப்புவாதமாகவும் செயல்படுவது, உள்நாட்டு அரசியல் கொந்தளிப்புகளை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொண்டது. அதன்பிறகு வர்க்க அடிப்படையில் எப்படி அணிதிரண்டது. மலேசியா இந்திய காங்கிரஸ், உள்நாட்டு கலவரங்கள், ஆட்சிகள் என நீண்ட வரலாற்றை (1930-1969) வரிசையாக அடுக்குகிறது இந்தப் புத்தகம். இன்றும் நிலைமை மாறவில்லை. பழைய வரலாற்றை உணர்வதன் மூலமாக எதிர்கால லட்சியத்தை அடைய முடியும் என்ற உன்னதமான நோக்கத்தை இந்தப் புத்தகம் தூண்டுகிறது -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 20/11/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *