பூர்வீக பூமி
பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான்சாலை, ராயப்பேட்டை, சென்னை14, விலை 80ரூ.
கர்நாடக மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து பிழைக்க சென்ற விவசாயிகள் பற்றிய கதையே பூர்வீக பூமி நாவல். கிராமத்தில் வேளாண்மை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் புதிய வாழ்க்கை தேடுவதும், ஏழை விவசாயிகளே ஒருவரை ஒருவர் ஏமாற்றிச் சுரண்டுதல் மற்றும் அரசியல் நாடகங்களால் அண்டை மாநில வெறி தூண்டப்படுதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நூலாசிரியர் சூர்யகாந்தன் இந்த நாவலில் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். கோவை மாவட்டத்து மக்கள் மொழியின் பச்சை நெடி நாவல் முழுதும் பரவிக்கிடக்கிறது. அன்னியத் தன்மையின் சுவட்டை காணமுடியாது. நாவல் படிக்கும்போதே கொங்கு நாட்டுக் கிராமியம் கொலுவிருக்கிறதை உணர முடிகிறது. அனைவரும் படித்து உணர வேண்டிய நூலாகும்.
பழஞ்சீனக் கவிதைகள், வான்முகில், மீனா கோபால் பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 180ரூ.
மேல்நாட்டு இலக்கியங்கள், தமிழில் நிறைய மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அளவுக்கு சீன இலக்கியங்கள் தமிழாக்கம் செய்யப்படவில்லை. அக்குறையை பழஞ்சீனக் கவிதைகள் என்ற இந்த நூல் போக்குகிறது. சீனப் பெருஞ்சுவர் எப்படி உலகை பிரமிக்க வைக்கிறதோ, அதுபோல் பிரமிக்க வைக்கக்கூடியவை சீனக்கவிதைகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சீனாவின் புகழ் பெற்ற கவிதைகளை, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் வான்முகில். பல கவிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
—-
விளம்பர உலகம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 80ரூ.
எந்தப் பொருளும் விற்பனை ஆகவேண்டுமானால் அதற்கு விளம்பரம் தேவை. காலத்துக்கு காலம், விளம்பரம் செய்யும் முறை மாறிவந்துள்ளது. விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட மாற்றங்களை கதைபோல சுவைபடச் சொல்கிறார் எஸ்.எல்.வி. மூர்த்தி. சர்வதேச அளவில் விளம்பரங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை புகைப்படங்களுடன் விளக்கி இருப்பது அருமை. விளம்பரத் துறையுடன் சம்பந்தம் இல்லாதவர்களும் படித்து ரசிக்கும்படி புத்தகம் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 29/5/13.