பேர் சொல்லும் நெல்லைச் சீமை
பேர் சொல்லும் நெல்லைச் சீமை, அப்பணசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், விலை 260ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023979.html தாமிரபரணி நதிக்கரையை தீரா தேசம் என்று சொல்வது சொல்வழக்கு. அந்த தீரா தேசத்தைப் பற்றி எழுத்தாளர் அப்பணசாமி தனது அழகு தமிழில் தொகுத்து எழுதியிருக்கும் நூல் இது. நெல்லைச் சீமை, தமிழ் மக்களின் ஐந்து திணைகளுக்கான வாழ்க்கை முறைகளையும் உள்ளடக்கியது. அதாவது மலைகளில் வாழ்ந்த மனிதன் வனங்களில் இறங்கி சமவெளிகளில் நிலை பெற்றது வரையான நாகரிக வளர்ச்சி முழுவதையும் கண்டது. அழிந்துபோன இலக்கியச் செல்வங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் அதிக நாகரிக வரலாறுகளையும் கொண்டது. அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகள் இங்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக வாழ்க்கை நிலவியதைக் கூறுகிறது என்று சொல்லும் அப்பணசாமி, இந்தப் பழம்பெருமையை ஆதியில் இருந்து அதாவது ஆதிச்சநல்லூரில் இருந்து தொடங்குகிறார். வரலாற்றுக்கு முந்தைய காலம் என்று சொல்லப்பட்ட காலகட்டத்துப் புதைகுழிகளில் இருந்து கிடைத்த எலும்புக்கூடுகளும், மண்பாண்டங்களும், பொன் அணிகலன்களும் இரும்பு ஆயுதங்களும் தமிழர்களின் பண்டை நாகரிகத்தைச் சொல்லும் அடையாளங்கள். சங்க இலக்கியங்கள் கற்பனைப் பாடல்கள் அல்ல. அவை, தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லும் சான்றாதாரங்கள் என்பதற்கு ஆதாரம் இந்த ஆதிச்சநல்லூர். கடல் வாணிபத்தின் மையமாக இருந்த, தமிழர்களின் முதல் தலைநகரம் என்று சொல்லப்படும் கொற்கை துறைமுகம், அந்நியரை எதிர்த்து நின்ற கயத்தாறு மற்றும் தோவாளை போர்கள், தென் இந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை, சிந்துக் கவி பாடும் சென்னிமலை, புளியம்பட்டி அந்தோணியார் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயில், களக்காடு இசைக்கோயில், கிருஷ்ணாபுரம் சிற்பங்கள், கூந்தன்குளம் பறவைகள் என தென்சீமையின் வரலாறு, இலக்கியம், கலை, தொன்மை நோக்கில் செய்திகள் இந்த நூலில் பரவிக்கிடக்கின்றன. அனைத்து சிறுதெய்வங்களின் பிறப்பும் களஆய்வோடு சொல்லப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம் என்ற அடையாளத்தைத் தாண்டி, சங்க காலத்திலேயே கயத்தாறு முக்கியப் பகுதியாக இருந்துள்ளது. கன்னடிய அரசனை எதிர்த்து போராடி உயிர்நீத்ததால் அங்கு வெட்டும் பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் நெல்லை சீமையே தென்காசி நாடு, கயத்தாறு நாடு என்ற இரண்டு பிரிவாக இருந்துள்ளது. கழுகாசலமூர்த்தி இருக்கும் கழுகுமலையில் குடைவரை கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சமணத்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த சமணப் பள்ளியில் தங்கிப் படித்து தீட்சை பெற்றுச் சென்றுள்ளார்கள். இப்படி மண்ணுக்குள் மறைந்த மகத்துவங்களைத் தோண்டி எடுத்துக் கொடுக்கும் அபாரமான சாதனையைச் செய்துள்ளார் அப்பணசாமி. -புத்தகன். நன்றி:ஜுனியர் விகடன், 17/6/2015.