பொன் அந்திச் சாரல் நீ
பொன் அந்திச் சாரல் நீ, ஸ்ரீஜா வெங்கடேண், வானதி பதிப்பகம், பக். 264, விலை 100ரூ.
மாத நாவல் உலகில் கொடி போட்ட சாதனையாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ். நெல்லை மாவட்டம், ஆழ்வார் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். பொன் அந்திச் சாரல் நீ என்ற அவர் எழுதிய நாவல், ஒரு தவறான தொலைபேசி அழைப்பால், ஒரு குடும்பம் சிதைவதையும், அதற்கு காரணமான மருத்துவரான தன் தாய்மாமனுக்காக, கதாநாயகன் தன் வாழ்க்கையே தியாகம் செய்வது பற்றியும் பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவல், நினைக்கவே நதியென்று கீழ்தட்டுக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வாழ்க்கையில் பெரிய பணக்காரியாக வேண்டும். அதற்கு ஒரே வழி, பணக்காரக் குடும்பத்து இளைஞனைக் காதலிப்பதுதான் என்ற எண்ணத்தில், தான் பெரிய அரசு அதிகாரியின் மகள் என்று பொய் சொல்லி காதலிக்கிறாள் கதாநாயகி, வித்தியாசமான காதல் கதை. ஸ்ரீஜா வெங்கடேஷ் நாவல்களில், உரையாடல்கள் சிறப்பாக அமைந்து, வாசகர்களைச் சுண்டி இழுக்கின்றன. பெண்களின் வலிகளும், ரணங்களும் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டு, படிப்போரின் நெஞ்சை நெகிழ வைக்கின்றன. நல்ல குறு நாவல்கள். -எஸ். குரு. நன்றி: தினமலர்,9/11/2014.
—-
தீண்டாத காதல், மல்லை சி.ஏ. சத்யா, விகடன் பிரசுரம், சென்னை, விலை 60ரூ.
காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காதலையும் அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளையும் எடுத்துச் சொல்லி இரு தரப்புக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்று ஆழமான வரிகளையும் கூறியதுடன், பெற்றோர், உற்றார், உறவினர்களை காதலித்து கலவரமில்லா சமுதாயத்தை அனைவரும் படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 10/9/2014.