மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில்
மகாபாரதம் – கேள்வி-பதில் வடிவில், ‘பொம்மை’ சாரதி, பக். 432, ஸ்ரீ மாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14. விலை ரூ. 180
வேத வியாஸரால் இயற்றப்பட்ட மகாபாரதம், தலைசிறந்த பண்புகளையும், தர்மநெறிகளையும் விளக்குவதால், இது ‘ஐந்தாவது வேதம்’ என்று போற்றப்படுகிறது. இதில் மனித மனத்தின் பலவீனங்கள், திருந்தும் வழிகள், இறைநெறி, தத்துவம், அரசியல், சரித்திர கால நிகழ்வுகள்… என்று பல்வேறு செய்திகள், பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. இதில் வரும் ஏராளமான கிளைக் கதைகளும் வாழ்க்கை நெறிகளைப் போதிப்பவையே. இத்தகைய மகாபாரதம் பற்றி தமிழில் பல நூல்கள் வெளிவந்தாலும், முதன்முறையாக கேள்வி – பதில் வடிவில் இந்நூல் வெளியாகியுள்ளது வித்தியாசமானது. இந்த புதுப்பாணியில், மகாபாரதம் எங்கு, எப்போது நடந்தது என்று அறிமுகப் படலம் தொடங்கி, ஆதி பர்வம் முதல் சாந்தி பர்வம் வரை (பகவத் கீதை தவிர) அனைத்திலும் வரும் கதாபாத்திரங்களையும், நிகழ்வுகளையும் பற்றி ‘குவிஸ் போட்டி’ போல், இந்நூலில் எளிய கேள்வி – பதில்கள் வடிவில் தொடர்ந்து படிப்பது சுலபமாக இருக்கிறது. அதாவது, மகாபாரதம் என்றால் என்ன? இது யாரால் எழுதப்பட்டது? இது எங்கேயிருந்து எழுதப்பட்டது? சர்ப்ப யாகம் என்பது என்ன? இப்படி நூற்றுக்கணக்கான சிறுசிறு கேள்விகளுக்கு பதில்கள் கூறப்பட்டுள்ளன. இதனால் மகாபாரதக் கதையும், அதில் வரும் சம்பவங்களும் நம் மனதில் ஆழமாகப் பதிவதோடு, படிக்க ஆர்வத்தையும் தூண்டுகிறது. – பரக்கத் நன்றி: துக்ளக் 13-12-12