மகாபாரதம்
மகாபாரதம், பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.
அரசியல் கற்க வேண்டியவர்கள் முதலில் படிக்க வேண்டிய பாடம் கல்கி வார இதழில், 58 வாரங்களாக, எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய, மகாபாரதத்தை சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் அதைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ராஜாஜி முதல், மகாபாரதத்தை தமிழில் பலர் கொடுத்துள்ளனர். ஆனால் பிரபஞ்சன் அளித்துள்ள மகாபாரதம், பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சுயசரிதை நூல்களுக்கு, அடிப்படை மகாபாரதம். வியாசர் தன் பேரப்பிள்ளைகளோடு இருந்ததை, தன் சுயசரிதையாக எழுதியது தான் மகாபாரதம். சிறு வயதில், கிராமங்களில் கூறப்பட்ட, பல்வேறு கதைகள் மூலம், மகாபாரதம் பற்றி நாம் தெரிந்து இருந்தாலும், அதை முழுமையான வடிவில் படித்தது வயது வந்த பின்தான். மகாபாரதத்தை, மிக அழகிய தமிழில் பிரபஞ்சன் தொகுத்துள்ளார். இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் மூலம், என்ன நீதியைப் பெறலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பீஷ்மரிடமிருந்து அன்பு, பாசம், வாழ்க்கை நெறிமுறைகள், கர்ணனிடமிருந்து பெறுவதைவிட, கொடுப்பதே உயர்ந்தது என்ற, வள்ளல் தன்மை. அர்ஜுனனிடமிருந்து வீரம், திரவுபதியிடமிருந்து கற்பு நெறி, துரியோதனனிடமிருந்து, பகைவரை அழிக்கும் முறை. கிருஷ்ணனிடமிருந்து, போர் தந்திரம் என, ஒவ்வொரு கதாபாத்திரம் மூலமும் ஒரு நெறியை அறிய முடிகிறது. அரசியல் என்ற சதுரங்க விளையாட்டை மிக அற்புதமாக படம் பிடிக்கிறது பிரபஞ்சனின் மகாபாரதம். பரமபத விளையாட்டில், பாம்பின் வாயில் சிக்கினால், வால் பகுதிக்கு வர வேண்டும். அதேபோல், அரசியல் சதுரங்கத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை விதுரன் கதாபாத்திரம் மூலம், மி அற்புதமாக சித்தரிக்கிறார் நூல் ஆசிரியர். அரசியல் கற்க வேண்டியவர்கள், முதலில் கற்க வேண்டிய நூல் மகாபாரதம். வாழ்வில், பல்வேறு பருவங்களில், பல நூல்களை படிக்கிறோம். அதில் பல நூல்கள் நம்மை கடந்து செல்கின்றன. சில நம்முள் தங்கிவிடுகின்றன. மிகச் சில நூல்களே, நம்முள் சிலிர்ப்பை ஏற்படுத்தி, தாக்கத்தை உருவாக்குகின்றன. அந்த வகையில், பிரபஞ்சன் எழுதிய மகாபாரதம் என்னும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. -வைகை செல்வன், எம்.எல்.ஏ., – அ.தி.மு.க. நன்றி: தினமலர், 21/12/2014.