மங்கல இசை மன்னர்கள்
மங்கல இசை மன்னர்கள், டாக்டர் பி.எம். சுந்தரம், முத்துசுந்தரி பிரசுரம், பக். 416, விலை 270ரூ.
கோவில்களில் அடைக்கலம் புகுந்து, திருமணங்களில் எட்டிப் பார்க்கும் நாகஸ்வரம் தவில் மங்கல இசை தமிழனின் தனி அடையாளம். கால மாற்றத்தால், மங்கல இசைக்கே மங்களம் பாடிக்கொண்டிருக்கும் இந்நாளில், இந்த அற்புதமான ஆராய்ச்சி நூல் மீண்டும் புத்துயிர் தந்துள்ளது அந்த கலைக்கு. ருக் வேதத்தில் உள்ளது என்றும் கோவில்கள் தோன்றியபோதே, நாகஸ்வரமும், தவிலும் தோன்றிவிட்டதென்று இசை மேதை பி.எம்.சுந்தரம் ஆய்வு முன்னுரையில் அழகாக எழுதியுள்ளார். வாசித்து சாதனை செய்த நாகஸ்வர, தவில் மேதைகள் பற்றிய வரலாறும், செய்திகளும் மறைந்துவிட்டன. நூலாசிரியர் தேடி அலைந்தும் வாசித்து ரசிக்குமாறு அதை எழுத, தகவல் கிடைக்கவில்லை என்று வருந்தியுள்ளார். சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள் திருவையாறு நாகஸ்வர வித்வான் சுப்பையாள பிள்ளையிடம் இசை பயின்ற தகவலும்,ஊர் ஊராய்த் தேடி தகவல் திரட்டிய அனுபவமும் மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. சுவையான சில தகவல்கள் இரட்டை நாயனம் வாசிக்கும் பழக்கத்தை திருப்பாம்புரம் சகோதரர்கள் உருவாக்கினர். கருங்கல் நாகஸ்வரத்தை, 45 நிமிடம் வாசித்து, யானையைப் பரிசு பெற்றவர் கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை. நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை கவிகாளமேகம் சினிமாவின் கதாநாயகர். இவருக்கு 4 மனைவியர் இருந்தும் பிள்ளைகள் இல்லை. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 15/5/2014.
—-
கால்நடைப் பழமொழிகள், பா. மதுகேசுவரன், வெளியீடு-முனைவர் ந. ஆனந்தி, பக். 80, விலை 50ரூ.
முன்னோர் தம் அனுபவத்தால் எளிமையாகவும், சுருக்கமாகவும், அனைவருக்கும் பயன்படும் வகையில் கூறிய பழமையான சொற்றொடர்களே பழமொழிகள். மனதில் எளிதில் பதிய வைத்துக்கொள்ளும் அறிவுரைகளாகவும் அவை இருக்கும். அவற்றில் உவமைகள் அமைவதும் உண்டு. கால்நடைப் பழமொழிகளின் அமைப்பு முறையையும், பிற கருத்துகளையும் இரண்டு கட்டுரைகளில் ஆசிரியர் விளக்குகிறார். பல்லாயிரக்கணக்கான பழமொழிகளில், கால்நடைகளைப் பற்றிய பழமொழிகளை பா.மதுகேசுவரன் தொகுத்தளித்துள்ள முறை நன்று. பசு, காளை, எருமை, ஆடு முதலிய விலங்குகள் பற்றியும், அவற்றோடு தொடர்புடைய பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், உழவு பற்றியும் வழங்கும் பழமொழிகளை வகுத்தும், தொகுத்தும், அகர வரிசைப்படி அளித்துள்ளார். சில பழமொழிகள் தலைப்புக்கேற்ப மாடு, பசு, பால் மீண்டும் மீண்டும் வருவதையும் பார்க்கலாம். கால்நடைகள் பற்றிய பழமொழிகள் மறைமுகமாக, மக்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளாகவே அமைகின்றன. ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. -பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 15/5/2014.