மண்ணில் தெரியுது வானம்

மண்ணில் தெரியுது வானம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், சுகான்ஸ் அபாரட்மென்ட்ஸ், புதிய எண்13, சிவபிரகாசம் தெரு, தி. நகர், சென்னை 600017, பக். 288, விலை 155ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-0.html

சமூக மற்றும் ஆன்மிக நாவல்கள் என்று பல படைப்புகளைப் படைத்திருக்கும் இந்நூலாசிரியர், தனது கதாபாத்திரங்களின் மனப் போராட்டங்களை, உணர்ச்சிமிக்க விவாத நடை மூலம் உரித்துக் காட்டும் பாணி, இவரது எழுத்துக்கு உண்டு. ஒரு நாவலுக்குரிய தலைப்பாக இந்நூல் இருந்தபோதும், மனிதன் மனப்போராட்டங்கள் இன்றி அமைதியாக வாழும் கலை குறித்து, முன்பு தினகரனில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். மௌனம் எத்தகைய ஆற்றலை, உயர்வைத் தர வல்லது என்பதை இந்நூலின் முதல் கட்டுரையில் விவரிக்கிறார். மௌனம் என்றால் யாரிடமும் பேசாமல் இருப்பது மட்டுமல்ல, ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது எவரோடும் எந்தத் தொடர்பும் இல்லாமல் மனதிற்குள் எந்தக் குழப்பமும் கூச்சலும் இன்றி, ஒரு அமைதியான இடத்தில் தனியாக அமர்ந்துகொண்டு, சுற்றுச்சூழலோடு மனதை லயிக்கவிடுவதாகும். இதனால் சுவாசம் சீராவதையும், கண்கள் பிரகாசம் அடைவதையும், உடல் குளிர்ந்து, உள்ளம் ஆனந்தம் அடைவதையும் உணரலாம் என்பதை பல்வேறு காரண காரியங்களோடு கூறி விளக்குகிறார். இதேபோல் உண்பது, உறங்குவது, பேசுவது, உடை உடுப்பது, ஒழுக்கமாக இருப்பது, முதியோரை மதிப்பது, குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு, மதம், குரு, ஆன்மிகம்… என்று பல விஷயங்களை சுமார் 57 கட்டுரைகளில் சுய அனுபவம் மற்றும் பல ஆன்மிகக் கருத்துக்களோடு ஆழமாக விளக்கியுள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 13/11/2013.  

—-

 

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, பக். 397, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html

உலகநாடுகள் பலவற்றிலும் இன்று தமிழ் பயன்பாட்டில் உள்ளது. உலகப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆய்வு செய்யப்படுகிறது. தமிழை தாய்மொழியாக அல்லாத அறிஞர்கள் பலரும் தமிழைக் கற்று அறிஞர்களாக விளங்குகிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தனிநாயக அடிகளார்தான். உலகத் தமிழ் அறிஞர்களை ஒன்றிணைத்து உலகத் தமிழ் மாநாடுகளைக் கண்டவர். யாழ்ப்பாணத்தின் கரம்பொன் கிராமத்தில் பிறந்த அவருக்கு நூற்றாண்டு விழா உலகெங்கும் நடத்தப்படும் இவ்வேளையில் அவரது படைப்புகள் அனைத்தையும் தொகுத்து நூலாக வெளிக்கொணர்ந்துள்ளனர். உலகம் முழுவதும் பயணித்து தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்தியது உள்ளிட்ட, பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். படிக்கப்படிக்க தமிழின் உயர்வும் தனிநாயக அடிகளாரின் உழைப்பும் நம் கண் முன் விரிகிறது. நன்றி: குமுதம், 20/11/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *