மனிதன் தேவர் நரகர்
மனிதன் தேவர் நரகர், பிரபஞ்சன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 180ரூ.
இன்றைக்கு யார் யாரை எல்லாமே பூனை நடையைப் பார்த்துவிட்டு உலக அழகி என்று மகுடம் சூட்டுகிறார்கள். தமிழ்த்திரை உலகில் நிஜமாகவே அப்படி ஒருவர் இருந்தார். உணவு, நீர் இரண்டும் அருந்தாமல் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் பசியும் தாகமும் இன்றி ராஜகுமாரியை ஒரு ரசிகர் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தனை பெரிய பிரபஞ்ச அழகி அவர்…‘ என்று எழுதுகிறார் பிரபஞ்சன். பி.யு. சின்னப்பா நடித்த கிருஷ்ணபக்தி டிவிடியைப் பார்த்துவிட்டே இந்த விமர்சனம். அந்த சின்னப்பாவுக்கு காஸ் யூம் கலைஞராக இருந்த வாசுவின் நினைவுகளை நெகிழும்விதமாகச் சொல்கிறபோது வருகிறது. திராவிட இயக்கத்தின் தூண்களாகவே இருந்து மறைந்த தூத்துக்குடி கே.வி.கே. சாமி, ஆசைத்தம்பியைப் பற்றி இன்றைய நியோ தி.மு.க. பலருக்குத் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. திருச்சி சிறை குவாரண்டைன் பகுதி தலைமை வார்டர் முன் நிறுத்தப்பட்டோம். சட்டை, வேட்டி, பனியன், டிராயர் அனைத்தும் அகற்றப்பட்டு நிர்வாணமாக நிறுத்தப்பட்டோம். பிறகு ஆடைகளை வைத்துக்கொண்டு கோவணம் கொடுத்துக் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள் என்று எழுதியிருக்கிறார் ஆசைத்தம்பி. இது வெள்ளைக்காரர் ஆண்ட காலத்தில் அல்ல… சுதந்திர பாரதத்தில்தான். கொலைக் குற்றமோ 2ஜி அலைக்கற்றை, கிரிக்கெட் சூதாட்ட ஊழல் வழக்கோ இல்லை. அழியட்டுமே திராவிடம் என்ற தலைப்பில் புத்தகம் எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார் வாலிபப் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஆசைத்தம்பி. தி.மு.க.வில் எழுத்துரிமைக்காக முதன் முதலில் சிறை சென்றவர் என்ற பெருமையை அடைந்தவர் ஆசைத்தம்பி என்று பதிவு செய்கிறார் பிரபஞ்சன். தாம் குமுதம் பத்திரிகை வேலையை விட்டு விலக நேர்ந்ததைச் சொல்லும் பகுதி மிகவும் நேர்த்தியானது. பணியை விட்டுவிலகி கணக்கெல்லாம் தீர்த்தபிறகு குடியிருந்த குவார்ட்டர்ஸைக் காலிசெய்யக் கொஞ்சம் அவகாசம் கேட்கிறார் பிரபஞ்சன். ஆசிரியர் எஸ்.ஏ.பி. சொன்ன பதில், நான் காலி பண்ணச் சொல்லலையே. எத்தனை மாதங்கள், எத்தனை வருஷங்கள் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளுங்கள். குமுதம் ஆசிரியர் குழுவில்தான் நீங்கள் இல்லை. வெளியில் இருந்து தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள். உங்கள்மேல் எனக்குள்ள மதிப்பு என்றும் குறையாது. 1980இல் மணியாச்சிக்கு வாஞ்சி பெயர் சூட்டப் போராட வேண்டி இருந்தது குமரி அனந்தனுக்கு. திராவிடர் கழகம் வாஞ்சியை சாதிவெறியன் என்றும் ஆஷை கனவான் என்றும் துண்டறிக்கை வெளியிட்டது என்றும் ஆஷ் படுகொலை செய்யப்பட்டது பற்றிய ஒரு கட்டுரையில் எழுதுகிறார் ஆசிரியர். தமிழ் எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் அரசாங்கம் கௌரவிக்கும் லட்சணத்தைப் பற்றி எழுதுகிற கட்டுரையில் நகைச் சுவை உணர்வோடு வெளிப்படுகற தார்மீகக் கோபத்தை எழுதுகிறவர்கள் வெகுவாக ரசிக்கலாம். ஏழு கிணற்றில் பிள்ளையார் கோயில் தெருவில் பத்துக்குப் பத்து பள்ளம் தோண்டவும் என்ற அரசு உத்தரவு தொனியில் உங்கள் கதைத் தொகுதி வருஷத்துச் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியவும் என்ற செய்தியை அக்கடிதம் உங்களுக்குப் பறையும். க.நா.சு. சொல்வாராம்… தினமும் எழுதணும்யா… எழுத்தாளன்னா எழுதிக்கிட்டே இருக்கணும். ஒரு நாளைக்கு ஐந்து பக்கமாவது எழுதவேண்டும். எழுதுவதற்குத்தான் எத்தனை விஷயங்கள் முன்னே கொட்டிக்கிடக்கின்றன என்பதை நிரூபிக்கும் அருமையான கட்டுரைகளின் தொகுப்பு இது. -சுப்ர பாலன். நன்றி: கல்கி, 7/7/2013.