மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன்
மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன், டாக்டர் ஒய். லிவிங்ஸ்டன், ஆரோவ்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை, பக். 427, விலை 240ரூ.
கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருப்பதோ, சிந்தித்துக் கொண்டிருப்பதோ வாழ்க்கை இல்லை. நாம் ஒவ்வொரு விநாடியும் எவ்வாறு சிந்தித்துச் செயலாற்றுகிறோமோ, அதுவே உண்மையான வாழ்க்கை என்று, அர்த்தமுள்ள வாழ்க்கை குறித்து நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் அலசி ஆராய்ந்து, ஒருவர் வெற்றியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி? அவ்விதம் வெற்றியான வாழ்க்கையை அமைக்க முயல்வோர் சந்திக்கும் பிரச்னைகள் எவை? அதற்கான தீர்வுகள் எவை? என்பன குறித்து பிரமிக்கும் வகையில் நூலில் விளக்கப்பட்டுள்ளது. நல்ல மனித வாழ்க்கைக்கு அவசியமான அத்தனை யோசனைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இதை வாழ்வியல் நூல் என்று கூறினாலும் மிகையாகாது. நன்றி: தினமணி, 14/11/2014.
—-
ஆதி சிவன் முதற்றே உலகு, எம்.கே.நாதன், செங்கைப் பதிப்பகம், செங்கல்பட்டு, விலை 120ரூ.
சிவனே முழு முதல் கடவுள். அவரே ஆதி இறைவன் என்று கூறும் சிவபெருமானைப் பற்றிய கதைகளின் தொகுப்பு இந்நூல். இது தவிர இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்கள், அர்த்த உருவ அமைப்புக்கான தத்துவம், அர்த்த நாரீஸ்வரரின் உருவ தத்துவம், பல்வேறு சிவ தலங்களில் உள்ள சிறப்புகள் போன்ற தகவல்களை தாங்கியதாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 19/11/2014.