மனுநீதி என்னும் மனு தர்மசாஸ்திரம் (மூலமும் உரையும்)

மு. வ. கட்டுரைக் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்), முனைவர் ச.சு. இளங்கோ, பாரி நிலையம் வெளியீடு, 184/88, பிராட்வே, சென்னை -108, பக்கம் 1656, விலை 1000 ரூ.

அறிஞர் மு.வ. அவர்களின் நூலாக்கம் பெறாத கட்டுரைகளின் தொகுப்பாக, இவ்விரண்டு தொகுதிகளும் வெளிவந்துள்ளன. நிறைகுடமாக விளங்கிய மு.வ. அவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டியவர். அன்னாரின் கட்டுரைகள் தமிழர்க்கும், தமிழ்மொழிக்கும் என்றென்றும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன என்றும் உறுதியாகக் கூறலாம். இந்நூலில், மொழி, தமிழ், சங்க இலக்கியம், திருக்குறள், சமயம், கலை, கவிதை, சிறுகதை, வாழ்வியல் எனப் பல தலைப்புகளில், 229 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பல கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகளாகவும், இலக்கிய விளக்கங்களாகவும் உள்ளன. இந்நூலின் இறுதியில், 13 ஆங்கிலக் கட்டுரைகளும் உள்ளன. அனைத்தும் வருங்காலத்தார்க்கும் உதவும் செல்வங்கள் என்று கூறலாம். மிகுந்த ஆர்வத்துடன், இந்நூலைத் தொகுத்தளித்த முனைவர் ச.சு. இளங்கோ அவர்களை அனைவரும் பாராட்டி மகிழலாம். அவர் நூலின் முகப்பில் கொடுத்துள்ள, ஆய்வு முன்னுரை, மு.வ. அவர்களைப் பற்றிய முழுச் செய்திகளையும் அறிந்துகொள்ளும் வகையில் உள்ளது. நல்ல அச்சும் கட்டுமானமும் நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. தமிழர்கள் இல்லங்களில் இருக்கவேண்டிய நூல். – டாக்டர் கலியன் சம்பத்து  

 

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வரை, எஸ். குருபிரசாத், அன்னை தெரசா கல்வி அறக்கட்டளை, 30/44, திருவள்ளுவர் தெரு, எத்திராஜ் நகர், மேற்கு மாம்பலம், சென்னை-33, பக்கம் 368, விலை 150 ரூ.

விமானப்படையைச் சேர்ந்த ஸ்வாடன் லீடர் சந்தீப் குமார் அகுஜா, பாகிஸ்தானில் அகப்பட்டுக்கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவம், ஐ. எஸ். ஐ., காவல்துறை இவர்களிடம் அகப்படாமல் எப்படி அகுஜா இந்தியாவிற்குத் தப்பி வருகிறான் என்பதை ஒரு விறு விறுப்பான நூலாக குருபிரசாத் படைத்துள்ளார். பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல். நம் பொருளாதாரத்தை அழிக்க நினைக்கும் அண்டை நாடுகளிலிருந்து, நம் நாடு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நம் ராணுவம் பலப்படுத்தப்பட வேண்டும். நாட்டுப்பற்று கொண்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேரவேண்டும். அந்த இளைஞர்களை உருவாக்கும் வீரமான ஆக்க வேலையை இந்த அருமையான நாவல் முனைப்புடன் செய்கிறது. – எஸ். குரு  

 

மனுநீதி என்னும் மனு தர்மசாஸ்திரம் (மூலமும் உரையும்), ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், கிழக்கு சி,ஐ,டி, நகர், சென்னை -35, பக்கம் 720, விலை 380 ரூ. 

மனு தர்ம சாஸ்திரம் என்றால், ஒரு குலத்திற்கு ஒரு நீதி வழங்கும் நூல் என்ற கருத்து அதிகம் உள்ளது. ஆனால், அதில் என்னதான் கூறப்பட்டிருக்கிறது என்பதை அறிய இந்த நூல் உதவும். அந்தக்கால வருணப்படி, சத்திரியரான மனு கூறியதை, அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா, சமஸ்கிருத மூல நூலுக்கு விளக்கத்தை எளிதாகப் படைத்திருப்பது சிறப்பு. தர்மம் என்ற வார்த்தை, காலம் காலமாகக் கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் எது நியாயம் என்பதை விளக்கும் நூலாக இதைப் படிக்கலாம். தண்ணீரில், சிறுநீர், மலம், கோழை, அசுத்தமான பொருள், ரத்தம், விஷம் இவற்றைக் கலக்கக் கூடாது (பக்கம் 192, சூத்திரம் 56). பாவத்திற்கு அஞ்சாத மனம் கொண்ட அரசாங்க அதிகாரிகள், தங்களிடம் ஒரு காரிய நிமித்தமாக வந்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அந்தக் காரியத்தை நிறைவேற்றித் தருவர். லஞ்சம் தராதவர்கள் காரியம் நிறைவேறமுடியாதபடி, கண்டுபிடித்து அவர்களுடைய சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்து, அவர்களை நாட்டை விட்டே வெளியேற்றவேண்டும் (பக்கம் 330, சூத்திரம் 124). இன்று நாட்டில் உள்ள நிலைமை எப்படி என்று எல்லாரும் அறிவர். அதே போல தனது உடல் பெருக்க, மற்றவற்றின் ஊனைச் சாப்பிடுவது சரியல்ல என்ற கருத்து (பக்கம் 254) வள்ளுவர் சிந்தனையை ஒத்திருக்கிறது. இம்மாதிரி கருத்துகளை இதில் படிக்கும்போது, நாம் இப்போது நாகரிகம் மேம்பட்டு வாழ்கிறோமா என்ற கேள்வி எழும். இருந்தாலும், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தாலும், அதை சரித்திரமாக எதிர்கால சந்ததியினர் படிக்கவேண்டும் என்ற கருத்து போல, இப்புத்தகத்தையும் படிக்கலாம் என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்திக்க வைக்கிறது. – பாண்டியன் நன்றி: தினமலர் 18/3/12  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *