மறக்கவே நினைக்கிறேன்
மறக்கவே நினைக்கிறேன், மாரி செல்வராஜ், விகடன் பிரசுரம், பக். 286, விலை 150ரூ.
To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-229-5.html ஆனந்தவிகடன் வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பு மூலம், எழுத்துலகில் அறிமுகமானவர், மாரி செல்வராஜ். தான் செய்தவற்றை, நியாயப்படுத்தியோ அல்லது ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும் தோரணையோ எதுவும் இல்லை. இதுதான் நடந்தது. இதை தான் செய்தேன் என்ற நிர்வாண அழகில், தனி கவனம் ஈர்த்துள்ளார். மரணத்தின் நாட்குறிப்பு கட்டுரையில், டைரிகளோடு, தான் சந்தித்த நிகழ்ச்சிகளை, நகைச்சுவையோடு ஆரம்பித்து, யாரோ ஒரு சிறுமியின் மரணத்தில் முடிக்கிறபோது, கனத்த மவுனத்தை சந்திக்கிறோம். அனைத்து கட்டுரைகளிலும், திருநெல்வேலி வட்டார மொழியில், கிராமத்து நினைவுகளை ரசிக்க முடிகிறது. அதேநேரம், சென்னைக்கு இடம் பெயர்ந்தபோது, நகர பூதங்களின் இடையே சிக்கிய, மிரட்சியையும் காணமுடிகிறது. கட்டுரைகளுக்கு பக்கபலமாய் உள்ளன ஸ்யாம் வரைந்த ஓவியங்கள். -சி. சரேஷ். நன்றி: தினமலர், 8/6/2014.
—-
ஸ்ரீ வைஷ்ணவமும் ஆசார்யர்களும், கவிஞர் சக்தி, பிரேமா பிரசுரம், பக். 176, விலை 55ரூ.
ஸ்ரீ வைஷ்ணவம் பற்றியும், உண்மையான வைணவன் யார் என்பது பற்றியும், நூலின் துவக்கத்தில் விளக்கும் ஆசிரியர், தொடர்ந்து, வைணவத்தின் சடங்குகள், மந்திரங்கள், தத்துவங்கள் பற்றியும் விளக்குகிறார். திருவாய்மொழி அருளிய நம்மாழ்வாரும், நம்மாழ்வாரின் பாசுரங்களை நாடெல்லாம் பரப்பிய மதுரகவியாழ்வாரும், குருவும் சீடருமாய் வாழ்ந்தவர்கள். நம்மாழ்வாரையே, தம் பாசுரங்களில் பாடிய மதுரகவியாழ்வார், தேவு மாற்றியேன் எனப் பாடியவர். மாமுனிகள் முதலான ஆசாரியர்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகளைத் தந்துள்ள மறை நன்று. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்து பாசுரங்கள் பாடம் பெற்ற திருமால் திருக்கோவில்கள் திவ்ய தேசங்கள் என்றும், திருப்பதிகள் என்றும் போற்றப்பெறுவன. அவ்வாறான நூற்றெட்டு திருப்பதிகளின் (திவ்ய தேசங்களின்) பெயர்கள், இருப்பிடங்கள், பெருமாள்-தாயார் பெயர்கள் முதலியன வைணவத் தலயாத்திரை செல்வோர்க்குப் பெரிதும் பயனளிப்பவை. -பேரா. ம.நா. சந்தான கிருஷ்ணன். நன்றி: தினமலர், 8/6/2014.