மறைந்த உலகம்
மறைந்த உலகம், ஸர் ஆர்தர் கோனான் டாயல், வழி நூலாசிரியர்-டாக்டர் கிருஷ்ணமாச்சாரி நரசிம்மன், எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ், பக். 640, விலை 320ரூ.
துப்பறியும் கதைகள் பல படைத்த ஸர் ஆர்தர் கோனான் டாயலையும், அக்கதைகளில் உலா வந்த ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறியும், கதாபாத்திரத்தை பலரும் இன்றும் நினைவில் கொள்வர் என்பது உறுதி. அவர் எழுதிய விஞ்ஞானத்தை மட்டும் மையக் கருத்துக்கள் கொண்ட நாவல் புரொபசர் சேலஞ்சர் ஸ்டோரிஸ் இன்றளவும் பலரும் படித்து மகிழ்வர். அதில் தி லாஸ்ட் வேர்ல்டு என்பதும் ஒன்று. அதன் தமிழாக்கமே இந்நூலாகும். இந்நூலை மொழி பெயர்ப்பு என்று இல்லாமல் முதல் நூல் எனும்படியாக, இனிய எளிய பழகு தமிழில் எழுதிய வழி நூலாசிரியரைப் பாராட்டாமல் இருக்க இயலாது. கிளாடிஸ் என்ற பெண்ணைக் காதலித்த மெலோன் எனும் பத்திரிகை நிருபர், தன் காதல் நிறைவேற மேற்கொள்ளும் வீரதீரச் செயல்களால், மறைந்த உலகம் கண்டுபிடிக்கப்படுகிறது என்றும் அவருக்குத் துணையாக புரொபசர் சேலஞ்சர், புரொபசர் சம்மர்லி, லார்ட்ஜான் ஆகிய மூவரும் உதவினர் என்றும் இந்நூல் விளக்குகிறது. நூல் படிக்கும்போது, சற்றும் அயர்வு இல்லாமல் இருக்க, விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. நூலில் பயண வரைபடங்கள் கொடுத்திருப்பது நூல் படிப்போரின் ஆர்வத்திற்கு துணை நிற்கும் என்று கூறுலாம். இந்நூல் படிக்கும்போது, தென் அமெரிக்கப் பயணம் செய்வதுபோல் உள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல். -கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 11/5/2014.