மறைமலையடிகள் வரலாறு
மறைமலையடிகள் வரலாறு, மறைமலையடிகள் பதிப்பகம், 29, தாமரைத் தெரு, பூம்பொழில் நகர் (ஆவடி), சென்னை 7=62, விலை 600ரூ.
தமிழ்மொழியை உயிர்மூச்சாகவும், தமிழ் ஆராய்ச்சியை தவமாகவும் கொண்டு, வாழ்ந்தவர் தமிழ்க்கடல் மறைமலையடிகள். இவருடைய மகன் பேராசிரியர் மறை. திரு, நாவுக்கரசு. இந்த நூலை எழுதி உள்ளார். மறைமலையடிகள் நாகப்பட்டினம், சென்னை பல்லாவரத்தில் வாழ்ந்த தகவல்களுடன், அவருடைய வாழ்க்கை வரலாற்று தகவல்களும் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளது. திருவாசக விரிவுரைக்கு அடிகள் எழுதிய வரிகளும், திரு.வி.க. மற்றும் வ.உ.சிதம்பரனாருடன் அடிகள் பழகிய நாட்களைப்பற்றி, நூலாசிரியர் எழுதியிருப்பதும், நூலுக்கு மேலும் சிறப்பை சேர்க்கின்றன. விநாயகர், முருகன், சிவன், திருமால் பற்றிய புராண கதைகள், கடவுள் தன்மைக்கு இழுக்கானவை என்றும் அவை சைவ சித்தாந்தக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறானதுடன், பகுத்தறிவுடனும் பொருந்தாதவை என்ற அடிகளின் கருத்தையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டி உள்ளார். எளிய, இனிய தமிழில் வெளிவந்துள்ள இந்த நூல் மறைமலையடிகளின் பெருமைகளை அருமையாக விளக்குகிறது. நன்றி : தினத்தந்தி, 28/8/2013.
—-
சங்க இலக்கியம் அறிமுகம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 75ரூ.
சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரையுள்ள ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட பாடல்கள் சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் பற்றிய விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் இந்த நூலை எழுதியுள்ளார். சங்க இலக்கிய நூல்களையும், அவற்றை எழுதியவர்கள் யார் என்ற விவரத்தையும் எளிய இனிய நடையில் விவரித்துள்ளார் ஆசிரியர். சங்க இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொள்ள அருமையான நூல். நன்றி : தினத்தந்தி, 28/8/2013.