மானாவாரிப்பூ
மானாவாரிப்பூ, மேலாண்மை பொன்னுசாமி, கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 299ரூ.
34 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு பெற்றள்ள இந்நூலில் சாதி, ஏழ்மை என பல்வேறு கருக்களை மையமாகக் கொண்டு படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் விறுவிறுப்பாகவும், படித்துத்தூண்டும் வகையிலும் எழுதியிருப்பதில் ஆசிரியரின் கைவண்ணம் புலனாகிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக அதே நேரம் சிந்தனையை தூண்டும் வகையில் எழுதப்பட்டு உள்ளது இதன் சிறப்பு.
—-
சனிக்கிரகத்தின் பார்வையில், விஜயா பப்ளிகேஷன்ஸ், விஜயா கார்டன்ஸ், 317, என்.எஸ்.கே. சாலை, வடபழனி, சென்னை 26, விலை 40ரூ.
சனியினால் ஏற்படக்கூடிய பலன்கள், ஏழரை சனி வந்தால் என்ன செய்ய வேண்டும், சனி யாருக்கு உதவுவார், யாருக்கு உதவமாட்டார், புராணங்களில் சனீசுவரர், இப்படி பல்வேறு தலைப்புகளில் சனி பற்றிய எல்லா விவரங்களையும் கூறுகிறது இப்புத்தகம். சனி பகவான் கோவில் பற்றிய தகவல்களும் உள்ளன. நன்றி; தினத்தந்தி, 16/10/2013
—-
இன்றைய சூழலில் நாம் சிந்திக்கவும் சந்திக்கவும், சொற்கோ, விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41.
கற்றலினும் கேட்டல் நன்று என்பது மூத்தோர் வாக்கு. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பொற்கோ நிகழ்த்திய சொற்பொழிவுகளின் நூல் வடிவம் இது. அன்பை வலியுறுத்தும் ஒரு கட்டுரை, மொழிக்கல்வியின் அவசியம் குறித்துப் பேசும் இன்னொரு கட்டுரை, தமிழகத்தில் தமிழ்க் கல்வியின் நிலை, வள்ளலாரின் அணுகுமுறைகள், சுயமரியாதையின் அவசியம்… என ஒன்பது கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஆதாரப்பூர்வமான பல தகவல்களைத் தருகின்றன. நம்மை ஆழ்ந்து யோசிக்கவும் வைக்கின்றன. மொழிக் கல்வி குறித்த கட்டுரையில், நன்னூலாரும் கம்பரும் வடமொழியை எப்படி தன்வயப்படுத்தி கையாண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது காலத்தின் அவசியம். இன்னொரு கட்டுரையில் மொழி வரலாறும் மக்கள் வரலாறும் இணைந்துதான் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்னும் வாதத்திற்கு வலுசேர்ப்பதற்கு அவர் எழுப்பும் கேள்வி பத்து சேர வேந்தர்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் வரலாறு என்னும் பெருமையை உடைய பதிற்றுப்பத்து குறித்து கேரளத்தவர்களுக்குத் தெரியுமா? ஆழமாகப் படிக்க வேண்டிய புத்தகம். புத்தகத்தில் இரண்டு நெருடல்கள், ஒன்று சொற்பொழிவுகளின் நூலாக்கம் என்று முன்னுரையிலேயே தெரிவித்துவிட்ட பிறகு என்னுடைய பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அவர்களே என்பது போன்ற சொற்பொழிவுகளின் தொடக்கங்களைத் தவிர்த்திருககலாம். இரண்டு சொற்பொழிவுகள் எப்போது நிகழ்த்தப்பட்டன என்பது குறிப்பிடப்படவில்லை. நன்றி: தினமணி, 6/10/13.