மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும்
மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும், வானதி பதிப்பகம், விலை 200ரூ.
பல்லவ பேரரசின் சம்பவங்களின் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சரித்திர நாவல். இளம் சிற்பி மதிஒளியும் ஆடலரசி மலர்விழியும் முதற் சந்திப்பிலேயே மோதிக்கொள்கிறார்கள். கருத்துக்களால், கலைத்திறன் கொடுத்த துணிவால், இளமைத் துடிப்பால் அவர்கள் ஒருவரையொருவர் வெல்லப் பார்க்கிறார்கள். கடைசிக் கட்டத்தில் ஒரு போட்டியை ஏற்படுத்தி வெற்றி தோல்வி என்று நிர்ணயிக்க முடியாமல், காதல் உள்ளங்களைப் பிரிக்காமல், திரைப்படத்திற்கு ஏற்றதாக இந்த சரித்திர நவீனத்தை அமைத்துள்ளார் பட அதிபர், டைரக்டர், கதை வசன கர்த்தா ஏ.வி. நாகராஜன். நரசிம்மவர்மன் பல்லவர், வானவன்மாதேவி, சாளுக்க மன்னரான விக்கிரமாதித்தன், ஆஸ்தானச் சிற்பியான வலிதாலயரின் பேத்தி கனிமொழி முதலானோர் வரலாற்று பாத்திரங்களாக படைக்கப்பட்டுள்ளார். கதைச் சுவைக்கு குறைவில்லாமல் பல காட்சிகள் ஏற்படுத்தி திருப்பங்கள் கொடுத்து, சிக்கல்கள் ஏற்படுத்தி, சிக்கல்களை விடுவித்து, படிப்பதற்கு ஆவலைத் தூண்டும் முறையில் இந்நாவல் அமையப்பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.
—-
கம்பர் கவியின்பம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
மகாகவி கம்பர் படைத்தஇராமாயண காப்பியக் கடலினுள் அவ்வப்போது மூழ்கி இன்புற்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் தான் அனுபவித்த இன்பங்களை பிறரும் அனுபவிக்கும் பொருட்டாக, அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். கவிஞர்கள் போற்றும் மகாகவி, கம்பரின் கருத்துப்புரட்சி, மகாகவியின் பண்பாடு, கம்பனின் மறதி, காபபிய உலகில் கம்பர், கம்ப இராமாயண அரசியல் போன்ற 12 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.