மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள்
மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள், டேவிட் ரிகோ, தமிழில் அகிலன் கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 248, விலை 150ரூ.
நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகின்றன. அவற்றை நாம் தவிர்க்கவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில், 1. எல்லாமே மாறுகின்றன, முடிவடைகின்றன. 2. எல்லாமே நினைக்கிறபடி நடப்பதில்லை. 3. வாழ்க்கை எப்போதும் நியாயமாய் இருப்பதில்லை. 4. வலி என்பது வாழ்வின் அங்கம். 5. மனிதர்கள் எப்போதும் அன்பாகவும், விசுவாசமாகவும் நடப்பதில்லை என்ற இந்த ஐந்தும் சவாலாகவே இருக்கின்றன. இந்த விஷயங்கள் குறித்த பயம், போராட்டம் தேவையில்லை. வாழ்வில் உள்ள எல்லாவற்றையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் நினைக்கத் தேவையில்லை. வாழ்க்கையில் என்ன இருக்கிறதோ அதை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழ்வதே சிறந்தது என்று வலியுறுத்தும் நூல். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது எதையும் செய்ய இயலாதது அல்ல. இருப்பதுடன் கைகோர்த்துச் செயல்படுவதாகும். அப்படிச் செயல்படும்போது அந்த அனுபவங்களில் இருந்து நாம் ஆன்மச் செழுமையைப் பெற முடியும் என்று நூல் கூறுகிறது. இப்படிச் சகித்துக் கொண்டு வாழ்வதால் மாற்ற முடியாத மகிழ்ச்சியின் மந்திரங்கள் நமக்குக் கிடைக்கின்றன என்றும் சொல்கிறது. நியாயமில்லாத வாழ்க்கையும், விசுவாசமில்லாமல் நடக்கும் மனிதர்களையும் எதிர்க்காமல் அப்படிப்பட்ட வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்பதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதைச் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதே நூலின் மையக்கருத்து. நன்றி: தினமணி, 19/1/2015.