முடிவுகளே தொடக்கமாய்
முடிவுகளே தொடக்கமாய் – கண.முத்தையா; பக்.144; ரூ. 30; தமிழ்ப் புத்தகாலயம், சென்னை- 17
தமிழின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று, தமிழ்ப் புத்தகாலயம். அதன் நிறுவனர் கண.முத்தையாவின் நினைவலைகளின் சிறு தொகுப்பே இந்நூல். அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயனின் “வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற அரிய நூலை தமிழுக்கு வழங்கியவர் கண.முத்தையா; நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்; தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். சுமார் 50 ஆண்டு காலம், தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலருடன் பழகிய இவரது நினைவுகளை அகிலன் கண்ணன் கோர்வையாகத் தொகுத்திருக்கிறார். இது அளவில் சிறிய நூலாக இருந்தாலும், விஷய அளவில் பல அற்புதமான சரித்திர நிகழ்வுகளின் பதிவாக இருக்கிறது. எழுத்தாளர்கள் பேரா.வையாபுரி பிள்ளை, சாமி சிதம்பரனார், சக்தி வை.கோவிந்தன், திருலோக சீதாராம், புதுமைப்பித்தன், அகிலன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, விஜயபாஸ்கரன், அரசியல் தலைவர்கள் பெரியார், அண்ணாதுரை, பக்தவத்சலம், ப.ஜீவானந்தம், பாலதண்டாயுதம், ம.பொ.சி, மு.கருணாநிதி போன்ற முந்தைய தலைமுறையினர் குறித்த ஆசிரியரின் பதிவுகள் உள்ளத்தை உருக்குபவை. இந்திய தேசிய ராணுவத்தில் தான் நிகழ்த்திய அரிய சாகசங்களை அடக்கமாகக் குறிப்பிட்டுச் செல்லும் ஆசிரியர் நேதாஜியின் அணுக்கத் தொண்டராக இருந்தவர். இந்நூல் அவரது நிறைகுடப் பாங்கை வெளிப்படுத்துகிறது. இந்திய தேசிய ராணுவத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் அரிய ஆவணம் இந்நூல் எனில் மிகையில்லை. எனினும், ஒரு பதிப்பாளராக கண.முத்தையாவின் நினைவுகள் இந்நூலில் அதிகமாக உள்ளன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.