முதலாம் இராசராச சோழன்
முதலாம் இராசராச சோழன், ஆனந்தவிகடன், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 135ரூ.
தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட இராசராச சோழன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி பெரும் புகழ்பெற்றவர். அவர் வரலாற்றை கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், மெய்க்கீர்த்திகளையும் ஆதாரமாகக் கொண்டு, விரிவாக எழுதியுள்ளார். நூலாசிரியர் கே.டி. திருநாவுக்கரசு. இராசராசனின் அண்ணனும், பட்டத்து இளவரசனுமான ஆதித்தகரிகாலன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான் என்பது சோழர் காலத்து மிக முக்கிய நிகழ்ச்சி. இதுபற்றி ஆசிரியர் விரிவாகவும், சுவைபடவும் குறிப்பிட்டுள்ளார். இராசாச சோழன் பற்றியும் அக்கால தமிழகத்தின் நிலை குறித்தும் அறிந்து கொள்ள சிறந்த புத்தகம்.
—-
வியர்வையின் வெகுமதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி முனைவர் வெ. இறையன்பு, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 115ரூ.
ஆதி மனிதன் முதல் தற்கால மனிதன் வரை வியர்வையின் மேதாவிலாசத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி 30 தலைப்புகளில் வியர்வையின் வெகுமதி புத்தகத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி முனைவர் வெ. இறையன்பு எழுதி உள்ளார். இதில் உழைப்பின் மகத்துவத்தை விவரிப்பதுடன், உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை என்ற சாட்டையடி வரிகளையும் சுழற்றியுள்ளார். சொற்கள் மூலமாகவும் செயல்கள் மூலமாகவும் ஊக்கத்தை நம்மை சுற்றியுள்ளவர்களிடம் காட்டினால் பணியை விருப்பம் உடனும், தளராமலும் செய்வார்கள் என்ற ஆலோசனையையும் நூலாசிரியர் கூறி உள்ளார். உழைப்புக்குக் கிடைக்கும் உண்மையான வெகுமதி வெளியிலிருந்து வருவதில்லை. அது நமக்குள் நடக்கும் ரகசியம் மாற்றம். அதுவே தியானமாகவும் மாறும். கனிந்தால் ஞானமாகவும் மரும் என்பதையும் ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளார். நன்றி: தினத்தந்தி,12/2/2014.